Design & Development
Graphic Designing | Web Development
‘எழில்நிலா’ இணையத்தளத்திலிருந்து சேமிக்கப்பட்ட சில ஆக்கங்கள்
Some articles archived from ‘ezilnila.ca’

குறளும் நிகழ்வும்

எழுதியவர்: நளினி மகேந்திரன்

குறளும் நிகழ்வும் 1

"எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்"


பரஞ்சோதி ஜயா காலையிலேயே எழுந்துவிடுவார். பல மணி நேரங்களிற்கு கடவுளை மனமுருகிப் பாடியும் தியானத்தில் ஈடுபட்டும் வந்தார். இதனை அவருடைய பேரனான ஆனந்தனும் தினமும் அவதானிக்கத் தவறவில்லை. ஆனந்தனோ கனடாவிலேயே பிறந்து வளர்ந்தவன் உயர் கலூரியிலே கல்வி பயிலும் அவனிற்கு இவர் ஏன் இவ்வளவு நேரங்களை வீணடிக்கிறார் என்றே பட்டது. இருந்தும் பெரியோரைக் கனம் பண்ணும் பழக்கத்தைத் தாய் தந்தையர் இள வயதில் இருந்தே ஊட்டி வளர்த்தமையால் அவன் அவரிடம் எதுவுமே கேட்கவில்லை. ஒரு நாள் பரஞ்சோதித் தாத்தா ஆனந்தனுடன் வெளியே நடந்து போக சந்தர்ப்பங் கிடைத்தது. தனிமையில் தாத்தாவுடன் பல விடயங்களைப் பற்றியும் கதைத்தான் கனடாவைப் பற்றி அவருக்கு நிறையச் சொன்னான் இங்கு மக்களின் இயந்திர மயமான வாழ்க்கை பற்றியெல்லாம் விளக்கினான். பின் அவனுடைய மனதிலே வெகுநாட்களாக இருந்து வந்த சந்தேகத்தைத் தெளிவு படுத்த நினைந்தான். மெதுவாகத் தன் தாத்தாவைக் கூப்பிட்டான். மெல்லத் திரும்பிய தாத்தாவைத் தயக்கத்துடன் நோக்கினான். அந்தப் பார்வையின் தயக்கத்தைப் புரிந்து கொண்டவர் போல ஏன் தயங்குகிறாய்? என்றார். இல்லை தாத்தா நீங்கள் இவ்வளவு நேரங்களைக் கடவுளைக் கும்பிட என்று ஒதுக்குகிறீர்களே அது தான் எனக்கு விளங்கவில்லை என்றான் தயங்கியவாறு. ஓ அதுவா? அதை எப்படி விளக்குவது என்று சிறிது சிந்தித்தவர் சரி உனக்குத் தேர்வு வரும் முன் ஏன் படிக்கின்றாய்? வானில் எறிந்த கல்லிற்கு என்ன நடக்கின்றது? அது கீழே வந்து விழும் என்றான் சிரித்தவாறு சரி தாத்தா நீங்கள் எனக்கு விளக்கமாக விளக்கித்தான் விடுங்களேன் என்றான். பிறந்தவர் இறந்தே தீருவர். இறப்பு என்பது நிச்சயமானது. அதில் இருந்து யாருமே தப்ப இயலாது. அம் மரணத்தை நினைத்து அஞ்சுவதோ மதியுடைமையாகாது. எனவே தான் அம்மரணத்திற்கான ஆயத்தங்களைச் செய்து வைத்துக் கொள்கின்றேன் என்றார். ஆனந்தனோ திருதிருவென விழித்தான். மாடிமீது ஏறுவதற்கு ஓர் ஏணியைப் பயன்படுத்தும் ஒருவனுக்கு மாடிக்குச் சென்றுவிட்டால் அது அவனுக்குத் தேவையற்ற ஒன்றாகிவிடும். யாராவது ஏணியிலேயே நின்று கொண்டிருக்க விரும்புவாரா என்ன? அது போலவே சீக்கிரம் இந்த உடம்பைக் கொண்டு பிறவாமையைப் பெற வேண்டும். அது தான் பெறுதற்கரிய பேறு. ஆதனைப் பெற வந்தது தான் இந்த மானிட உடம்பு. இதனைப் பெற இயலாதவர்கள் இயமனின் பாசக் கயிற்றால் கட்டுண்டு அழிவர். இயமனைக் கண்டு ஐம் புலன்களும் கதிகலங்கி மதிமயங்கி நெறிதயங்கி அச்சமுறுவர். இந்த அல்லல்கள் வருமுன் இறைவனை வணங்கி அவன் கருணையைப் பெற்றிருப்போமேயாயின் இந்த அல்லல்கள் எம்மை அணுகா. மரணப் படுக்கையில் படுத்துக் கொண்டு வேதனைப் படக் கூடாது. வரும் முன் காக்க வேண்டும். ஏன் இதனை வள்ளுவர் கூட இப்படிக் கூறுகின்றார்.

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்

தாத்தா அதன் விளக்கத்தை நான் சொல்லட்டுமா என்ற ஆனந்தன் தாத்தாவின் பதிலுக்குக் காத்திராமல் சொல்லத் தொடங்கினான். வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

முற்றும்.