"உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து"
ராமநாதன் வாத்தியார் ஒரு வருடமாக அகதி என்னும் பெயர் தாங்கி அலைந்து உலைந்துவிட்டு இப்போ தான் தன்
வீட்டிற்கு மீண்டிருந்தார். அவரின் வீட்டிலே பொருட்கள் யாவும் களவாடப் பட்டிருந்தன. அவரின் மனைவி
மீனாட்சி டீச்சரிற்கோ வீட்டில் பொருட்கள் களவு போனது பெரிய மனக் கவலையாக இருந்தது. சமைத்துச் சாப்பிடக்
கூட இயலாமல் இருந்தது. அவர்களிடம் பெரிதாகப் பணமும் இருக்கவில்லை. அக்கம் பக்கத்திலோ இப்போதெல்லாம்
தெரியாத முகங்களே அதிகமாகத் தென்பட்டன. தெரிந்தவர்கள் மிகச் சிலரே. பிள்ளைகளே இல்லாத அவார்கள் இதுவரை
காலமும் தம்மூர்ப் பிள்ளைகளைத் தம் பிள்ளைகள் போலவே நினைத்திருந்தனர்.
நிவாரணப் பொருட்கள் கிடைப்பதால் அவர்கள் சீவியமும் ஏதோ போய்க் கொண்டிருந்தது. வயது போன நேரத்திலே இப்படித் தனித்துப் போய் விட்டோ மே என்று அவர்கள் மனம் வருந்தினார்கள். அவர்களுக்கு ஆறதல் சொல்ல அயலவர் பலர் வருவார்கள். அவர்களுடன் அளவளாவுவதில் சிறிது மன அமைதி கிடைக்கப் பெற்றனர். இப்படியே அவர்களுடைய வாழ்க்கை மிகுந்த சங்கடங்களுக்கு மத்தியிலும் ஏனோ தானோ என்று நகர்ந்துகொண்டிருந்தது.
ஒரு நாள் அவர்களுக்கு ஒரு வெளிநாட்டுக் கடிதம் வந்திருந்தது. பெயர் மாறி வந்து விட்டது போலும் என நினைத்தார்கள். திரும்பத் திரும்ப முகவரியை வாசித்தார்கள். அது அவர்களுக்கானதே என்ற முடிவுக்கு வந்தவராக கடிதத்தை உடைத்து உரத்து வாசித்தார் இராமநாதன் வாத்தியார். தந்தையற்ற எனக்குத் தாய் தந்தையாக இருந்து என்னை வழி நடத்தி இவ்வளவு தூரம் உயர வைத்த உங்களை எப்படி நான் மறப்பேன். இவ்வளவு நாட்களும் எங்கே என்று தொpயாமல் இருந்தேன் இப்போ நீங்கள் வந்துவிட்டதாக அறிந்ததனால் எழுதுகின்றேன். உங்களுக்கு உதவி செய்ய நான் எப்போதும் தயாராகவே இருக்கின்றேன். அதை நான் செய்த பாக்கியமாகக் கருதுகின்றேன். இச் சிறிய தொகையை ஏற்றுக் கொள்வீர்கள் என நினைக்கின்றேன். உங்களை என் தாய் தந்தையராக நினைத்தே இதை அனுப்புகின்றேன். இப்படிக்கு உங்களால் உயர்வு பெற்ற உங்கள் மகள் கீதா என்று இருந்தது. இருவருடைய கண்களும் கலங்கிவிட்டிருந்தன. நடுங்கும் கரங்களினால் கீதா என்று வாய் முணு முணுத்தபடி கடிதத்தைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தார். நாங்கள் அப்படி என்ன உதவி கீதாவுக்குச் செய்துவிட்டோ ம் . இது கடவுளால் கிடைத்துள்ள உதவி என்றார் மீனாட்சி.அப்போ அவரின் நினைவில் வந்ததெல்லாம்
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து
என்ற திருக்குறள் தான்.
முற்றும்.