Design & Development
Graphic Designing | Web Development
‘எழில்நிலா’ இணையத்தளத்திலிருந்து சேமிக்கப்பட்ட சில ஆக்கங்கள்
Some articles archived from ‘ezilnila.ca’

படித்துச்சுவைத்தவை

தடைகளைக் தாண்டுவது எப்படி?

கணவன் மனைவிக்கு இடையே சண்டை வருவதற்கான காரணங்களைப் பட்டியல் போட்டால் அதில் முதலிடத்தில் நிற்பது காசோ, பணமோகூட இல்லை !

வார்த்தைகள். உச்சரிக்கிற அந்தக் கணமே காற்றில் கரைந்து போகிற வார்த்தைகள்தான். கணவன் – மனைவி உறவில் கசப்பு வளர்வதற்கு முதல் காரணம் ! இந்த வெறும் வார்த்தைகள்தான் பல தம்பதிகளை கோர்ட வாசல் வரை கொண்டு போயிருக்கின்றன ! இந்த வெறும் வார்த்தைகள் தான் பல தம்பதிகளை ஒரே வீட்டுக்குள் அந்நியர்கள் போலவும் வாழவைக்கிறது !

இந்த இடத்தில் ஒரு சின்ன கதை !

தன் மனைவிக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பது பற்றி அவன் கவலைப்படுவதே இல்லை ! கணவனுக்குப் பொருத்தமான மனைவி என்பதால் அவளும் கணவன் மாதிரிதான் ! ஒரு நாள், கணவன் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மனைவியும் கணவனைப் பற்றிக் கவலைப்படாமல் தூங்கப் போய்விட்டாள். நள்ளிரவு நெருங்கும் நேரம் வீட்டின் கதவு தட்டப்பட்டது. மனைவி கதவைத் திறந்தாள். கணவன் தான். ஒரு குரங்கை கொண்டு வந்திருந்தான். தான் கொண்டு வந்த குரங்கைப் மனைவி பக்கத்தில் படுக்க வைக்க… மனைவியால் கோபத்தை அடக்க முடியவில்லை. என் பக்கத்தில் குரங்கைப் படுக்க வைக்கிறீர்களே ! நாற்றத்தைப் பற்றி நீங்கள் நினைத்துப் பார்க்கவே இல்லையா ?

கணவன் சொன்னான், கல்யாணமான புதிதில் நாற்றத்தை சமாளிப்பது எனக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால், போகப்போக எனக்குப் பழகி விடவில்லையா ? அதே மாதிரிதான், கொஞ்ச நாளில் குரங்குக்கும் பழகிவிடும்…

அவ்வளவுதான், கணவனின் இந்தக் குத்தலாக வார்த்தைகள் மனைவியைக் காயப்படுத்திவிட்டன. இவர்களின் தாம்பத்திய வாழ்க்கையும் அந்த இரவோடு முறிந்துவிட்டது !

இந்த இடத்தில் தலாய்லாமா சொன்ன வார்த்தைகளை நாம் நினைத்துப் பார்ப்பது அவசியம்.

நீங்கள் இந்தப் பூமியில் பிறந்ததன் அர்த்தம் பூர்த்தியாக வேண்டுமென்றால், அடுத்தவருக்கு உதவி செய்யுங்கள். அடுத்தவருக்கு உதவி செய்ய முடியாவிட்டால்கூடப் பரவாயில்லை ! ஆனால், யாரையும் புண்படுத்திவிடாதீர்கள் ! ஆனால், இன்று சில வீடுகளில் நடப்பது என்ன ? கணவனும் மனைவியும் ரணமாகும் வரை ஒருவரை ஒருவர் வார்த்தைகளாலேயே காயப்படுத்திக் கொள்கிறார்கள். சிந்தித்துப் பார்த்தால் விசித்திரமாகக்கூட இருக்கிறது ! மனித குலத்தின் அறிவு, வளர்ச்சி ஆகியவை வளர வளரத்தான் விவாகரத்து விகிதமும் அதிகரித்துக் கொண்டு வருகிறது ! இதற்கு என்ன காரணம் ? இதற்குப் பதில் அறிவு என்ற வார்த்தைக்கான அர்த்தத்தில இருக்கிறது !

சரி, அறிவு என்பது என்ன ? அறிவு என்பது புத்தகங்களில் இருக்கும் வார்த்தைகளில் இல்லை ! அறிவு தென்படுவது மனிதனின் நடவடிக்கையில் !

நிர்வாக இயலில் இப்போது அழுத்தம் கொடுத்துப் பேசப்படும் சப்ஜெக்ட் – Inter personal skills ! ஒருவன் தன் சக ஊழியர்களிடம், மேலதிகாரிகளிடம், தனக்குக் கீழே வேலை செய்பவர்களிடம், வாடிக்கையாளர்களிடம் என்று அனைவரிமும் எப்படி செம்மையான உறவை ஏற்படுத்திக் கொள்வது என்று சொல்லித் தருவது தான் இந்த Interpersonal skills !

பார்க்கும் வேலையில் எத்தகைய குணாதிசயம் நிறைந்தவர்கள் வேகமாக முன்னுக்கு வருகிறார்கள் என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது ! இந்த சர்வேயின் முடிவு என்ன தெரியுமா?

ஒருவன் முன்னுக்கு வர, சம்பந்தப்பட்ட சப்ஜெக்ட் பற்றிய அறிவு 35 சதவிகிதம் இருந்தால் போதும். ஆனால், இன்டர் பர்சனல் ஸ்கில்ஸ் 65 சதவிகிதம் வேண்டும் ! அதாவது, உறவை எப்படிப் பலப்படுத்துவது என்று தெரிந்தவனால்தான் எந்தவொரு தடையையும் எளிதாகத் தாண்டி, செய்யும் தொழிலில் முன்னுக்கு வரமுடியும் ! சம்பளத்துக்காக வேலை செய்யும் இடத்திலேயே உறவுகளை வளர்க்கும் திறன் முக்கியம் என்றால், வீட்டிலே இது எந்த அளவுக்கு முக்கியம் என்று யோசித்துப் பாருங்கள்.

ஒருவர் தவறே செய்திருந்தாலும் நீ செய்ததும் தவறு என்று எப்போதும் கூறாதீர்கள். மாறாக எது சரி ? என்று அவர் புரிந்துகொள்ள உதவி செய்யுங்கள் ! – இதுதான் இன்டர் பர்சனல் ஸ்கில்ஸின் பாடம் ! இது அலுவலக நடைமுறைக்கு மட்டுமல்ல, இல்லத்தின் இனிய உறவுமுறைக்கும் பொருந்தும்.

இன்று பலரின் வீட்டில் கணவன் – மனைவி உறவு என்பது உயிரற்ற கல் மாதிரி இருக்கிறது ! ஆனால், இதில் விசித்திரம் என்னவென்றால், நமது நாட்டின் ரிஷிகள் கற்களில் செதுக்கி வைத்த கஜுராஹோ சிலைகளில் கூட காதல் ரசம் சொட்டுகிறது ! உயிர் இருக்கிறது !

– மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்…