சலிப்போ- களிப்போ எதுவானாலும் அதற்கு நம் நினைப்புத்தான் காரணமாகும். நம்மைப்பற்றியே நாம் கவலைப்படத் துவங்கினால் உலகத்திலே அதிக துன்பமுள்ள மனிதன் நாம் தான் என்று நமக்குத் தோன்றும். ஆனால் தன்னைப் பற்றியே யோசிக்கிற அந்த மனோபாவம்தான் மகிழ்ச்சியான நேரத்தில் தன்னைப் போல கொடுத்து வைத்தவன் யாருமில்லை என்று நினைக்க வைக்கும். வாழ்க்கையில் மனம் அதிகமாக அலட்டிக் கொள்ளாமலிருக்க எல்லோரைப் பற்றியும் அவ்வப்போது சிந்திக்கிற இயல்பை வளர்க்க வேண்டும்.
தன்னைப் பற்றி மட்டுமே நினைப்பவர்கள் ஒரு கதையை வாசித்தாலும் அல்லது ஒரு திரைப்படத்தைப் பார்த்தாலும்
அதில் கதாநாயகன் தன்னைப் போலவே கஷ்டப்படுவதாக சொல்லிக் கொள்வார்கள். ஆனால் உண்மையில் அந்த கதையில் வரும்
வில்லன் குணாதிசயத்தோடு நடப்பவர்களாகவும் அவர்கள் இருக்கலாம். தனது சம்பந்தப்பட்ட எதையும்
நியாயப்படுத்துகிற பண்பு தன்னைப் பற்றியே சிந்திப்பதன் மூலம் ஏற்படுவதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
நன்றாக வாழ்பவர்களை நம்மோடு ஒப்பிட்டுப் பார்த்தால்தான் நம்மிடம் ஏக்கப் பெருமூச்சு வெளிப்படும். நம்மை
விட பெரிய பிரச்னையை வைத்துக் கொண்டு வாழ்பவர்களோடு எண்ணிப் பார்த்தால்தான் நாம் சின்ன
விஷயங்களுக்கெல்லாம் அலட்டிக்கொண்டிருக்கிறோமே என்பதாக நாணம் வரும்.
வாழ்க்கையில் நாம் நிம்மதியாக இருக்க சில பழக்கங்களை கைகொள்ள வேண்டும். நாம் ஓர் உருப்படியான காரியம் செய்து அதற்கு தானாக பாராட்டு கிடைத்தால் அது தன்னை ஊக்கப்படுத்துவதற்கு உதவியாக இருக்கிறது என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். அதே சமயம் நாம் எதிர்பார்த்தபடி யாரும் பாராட்டா விட்டால் அதற்காக அலட்டிக் கொள்ளாமல் பாராட்டத் தேவையான திறனாய்வு அவர்களிடம் இல்லை என்று அமைதியாக இருக்கப்பழக வேண்டும். நம்மை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்பதை எதிர் பார்க்கக்கூடாது. அதே சமயம் நமது மரியாதையைக் காப்பாற்றிக் கொள்வதில் நாம் அக்கறையோடு இருக்க வேண்டும்.
சில சந்தர்ப்பங்களில் நாம் ஒதுங்கியிருப்பதே நம் மரியாதையை காப்பாற்றுவதாக இருக்கும். அதற்கு இணங்கவும் மனம் குறைபடாமல் ஒதுங்கியிருக்க பழகிக்கொள்ள வேண்டும். தேவைகளை பூர்த்தி செய்து மனநிறைவை அடைய வேண்டும் என்பதை விட தேவைகளை குறைத்துக் கொண்டு மன நிறைவை அடைய பழகிக் கொள்ள வேண்டும். இதுவெல்லாம் நாம் எப்போதும் நிம்மதியாயிருக்க கைக்கொள்ள வேண்டியவை.