"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு"
வேலையால் களைத்துப்போய் வீடு வந்த காந்தன் தன் சப்பாத்துக்களைக் கழற்றிக் கொண்டிருந்தான். படுக்கையிலே
சாய்ந்திருந்த பூமா மெல்ல மெல்லக் கால்களைத் தரையிலே தேய்த்தபடி தலையைத் தன் கைகளினால் சரி செய்தபடி
எழுந்து வந்தாள். உங்கட அப்பா இன்றைக்கு 'வண் மினிட்' கோல் எடுத்தவர். உங்கள உடனடியாக எடுக்கட்டாம்.
அங்க கொழும்பில கன நாளைக்கு நிற்க ஏலாதாம் எனச் சிடு சிடுப்பாகக் கூறி முடித்தாள். மாதமொருக்கால்
வந்திடுவினம் அனுப்புகிற காசிற்கு மேலாக டெலிபோன் பில் வந்து விடும். உதெல்லாம் அவர்களுக்கெங்கே
விளங்கப்போகுது என்று கடுகடுப்பாகக் கூறினாள். யாவற்றையும் மெளனமாகக் கேட்டபடி குளிக்கவென்று
போய்விட்டான் சாந்தன்.
எப்போதும் ஏன் இவள் இப்படி அறியாமல் கதைக்கின்றாள். ஊரில் அதுகள் படுற கஷ்டங்கள். எங்களப் பெத்து வளர்த்துவிட்டதற்கு நாங்கள் இதுகும் செய்யாவிட்டால் இருந்தென்ன பலன். இவளுக்கு இதை எப்படி உணர வைப்பது என்று மனதிற்குள் வெதும்பிக் கொண்டிருந்தான்.
மறுநாள் வேலை செய்யும் இடத்திலே தன்னுடன் வேலை செய்யும் பாலா மாஸ்டரிடம் தன் மனச் சுமைகளைக் கொட்டினான் காந்தன். அவரின் ஆலோசனைப்படி வீட்டிலே பல நல்ல நூல்களை வாங்கிப் போட்டான். ஊரிலே மக்கள் படும் கஷ்டங்களை அறிவதற்காக பல பத்திரிகைகள், தமிழ் வானொலி என்று பல வசதிகளையும் செய்து கொடுத்தான்.
நாட்கள் நகர்ந்தன. பூமாவிலே மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை அவனால் நம்பவே முடியாமல் இருந்தது. ஏனெனில் மறு முறை காந்தனின் அப்பா வந்து போன் கதைத்தபோது வேலையால் வந்த காந்தனிடம் அவன் அப்பா விடயம் பற்றிப் பக்குவமாக எடுத்துச் சொன்னதோடு அவரைக் கொழும்பில் கன நாட்களுக்கு மினக்கெட வைக்க வேண்டாம் எனவும் எடுத்துக் கூறி பணம் அனுப்புவதற்கு அவனை ஊக்கப் படுத்தவும் தவறவில்லை.
மறு நாள் வேலைக்குச் சென்ற காந்தன் பாலா மாஸ்டரிடம் பூமாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றிக் கூறினான்.
அதற்கு பாலா மாஸ்டர் கூறினார்.
அறிவான நூல்களைப் படிக்குந் தோறும் அறியாமை தேய்ந்து அறிவு வளரும் அதைத் தானே வள்ளுவரும் இப்படிக்
கூறுகிறார்.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
மணலில் உள்ள கேணியைத் தோண்டத் தோண்ட நீர் ஊறும் அது போலவே எவ்வளவு தூரம் நாம் படிக்கின்றோமோ அவ்வளவுக்கு எமது அறிவும் வளரும்.
முற்றும்.