நேற்றொரு “உலக்கையன்” ஊருக்குப் போய் வந்தான்
போய் வந்து … சொன்னான் ..
ஊரில் சனமெல்லாம் “சுதியாய்” இருக்குதெண்டான்
“சுதி” எண்டால்..? கேட்டது நான்.
திருவிழா நடப்பதும்
தேருலாப் போவதும்
கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம் யாவுமே …
முன்பு போலவே மும்மரம் எண்டான்.
பொடி பெட்டை யாவரும் “Tution” போவதும்
இடைப் பட்ட நேரத்தில் புதுப்படம் பார்ப்பதும்
சோடி பிடித்து பின்னலைந்து சுழட்டல் செய்வதும்
வலு நேர்த்தி எண்டு …
வாய் வழியச் சொன்னான் “சொதிவாயன்”
ஆமியைக் கண்டால் சனங்கள் சிரிப்பதும்
சனங்களைக் கண்டால் ஆமி சிரிப்பதும்
கண்கொள்ளக் காட்சி என்று ..
கண்ணுக்குள் விரலை விட்டான்
சோதனை யாகினும் விசாரணை ஆகினும்
“Sorry” சொல்லி செய்வதே
பழக்கம் ஆகையால் ..
படையினர் குறித்து பயமேதும் இன்றி ..
அடுக்கிக் கொண்டு அகலப் போனான்.
அப்போ .. சனங்கள் யாவரும் சுதந்திர
உணர்வுடன் உலாவரக் கண்டாய்?
விடுதலை பெற்றதாய் உணரக் கண்டாய் ..?
சினத்துடன் கேட்டேன்.
விடுதலை … என்றால்..?
முளியைப் பிரட்டிக் கேட்டது அவன்
விளங்காப் பயல்
சோற்றுக்கு அலைகின்ற “சோத்து மாட்டுக்கு”
விடுதலைக் கெங்கே விளக்கம் தெரியும்?
சுதந்திர உணர்வின் சுகமெங்கே புரியும்?
நேற்றுத் தான் எனது தங்கச்சி… கிருசாந்தி
சிதைத்துப் புதைத்த வலியின் கொடுமையால்
கொதிக்கும் நெஞ்சில் ..
இன்னும் இன்னும் எத்தனை கொடுமை .
செம்மணிப் புதைகுழி புதைந்து மூச்சுத்திணற…
பிராணனை தேடும் உறவுகள் அங்கே.
தோண்டத் தோண்ட எங்கும் புதைகுழி …
நூறு .. இருநூறு .. ஆயிரமாய் விரியும் அவலங்கள்
அழுத்தும் பூமிப்பரப்பில்
சிரிப்பொலி எழுவதற்கு சாத்தியமுண்டா..?
கிருசாந்தி தொடங்கி .. சாரதாம்பாள் வரையும்
கசக்கி முகர்ந்த காமுகக் கூடாரத்தில் வரவேற்பாம்
வணக்கம் வேறாம்.
கடலுக்குச் சென்று வலை விரிக்கவும்
வயலுக்குச் சென்று விதைத்தறுக்கவும்
கால நேரம் தூரம் கணிப்பது
அவனே ஆன பூமியில் ..
நமது தலைவிதி நம் கையில் உண்டா?
பாலியல் வதைகள் .. படுகொலை நிகழ்வுகள்
கைதுகள் .. காணமல் போதல்
புதைகுழி கொடுமைகள் ..
இன்னபிற அவலங்கள் .. யாவுக்கும்.
விசாரணை வேண்டுமென மடிப்பிச்சை
கேட்பதா தமிழன் நிலை.
எய்தவனிடமே அம்பை நோவென்பது
அபத்தம் .. அவலம்.
சோற்றை உருட்டி உருட்டி உள்ளே தள்ளி …
உண்ட களைப்பில் விழுந்து படுத்து ..
மாலையில் எழுந்து படம் ஒன்று பார்த்து ..
பாட்டும் கூத்துமாய் காலம் கழித்தால்..
சுதந்திரம் வாழ்வின் சுகமெனக் கொள்வதா…?
இரத்தம் சூடேற .. கேட்டுத் திரும்பினேன்.
நிண்டவனைக் காணவில்லை.
கண்டால் மடக்கவும் .. கேள்விகளால்!
-எழுதியவர் யாரோ-