Design & Development
Graphic Designing | Web Development
‘எழில்நிலா’ இணையத்தளத்திலிருந்து சேமிக்கப்பட்ட சில ஆக்கங்கள்
Some articles archived from ‘ezilnila.ca’

படித்துச்சுவைத்தவை

அன்னை தெரேசாவை தெய்வமாக்கிய ஒரேயொரு வசனம்!

நமக்கு யாருமே துணையில்லை என்று நிறையப்பேர் அவலமாகக் குரல் கொடுப்பதை எங்கும் சர்வசாதாரணமாகக் கேட்க முடியும். நமக்கு வாழ்வில் கஷ்டங்கள் வரும்போது யாராவது எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்ய முன்வருகிறார்களா ?
அப்படி வருவோர் என்றும் மாறாமல் இருப்பார்களா?
அப்படியானவர்களை எங்குமே காணமுடியவில்லை. இந்த வேதனையின் வெளிப்பாடே நமக்காக யாருமே இல்லை என்ற அவலக் குரல்களாகும். நமக்கு யாருமே இல்லை என்ற குரல்கள் எதனால் ஏற்படுகின்றன, காரணங்களைப் பார்ப்போம்.
கடவுள் காப்பார் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். சினிமாப் படங்களில் கடவுள் திடீரெனத் தோன்றி காப்பது போன்ற ஒரு கருத்தில்தான் அவர்கள் சொல்கிறார்கள் என்று சாதாரண மக்கள் கருதுகிறார்கள். ஆனால் இந்த உலகத்தில் ஐந்து நிமிடத்திற்கு ஒருவர் எயிட்ஸ் நோயினால் மடிந்து போகிறார். அந்த எயிட்ஸ் நோயாளியைக் காக்க கடவுள் வரவில்லை. சமுதாயம் கூட அவர்களுக்கு துணையாக இருக்கவில்லை. எயிட்ஸ் நோய் பற்றிய புரிதல் இன்மையால் இந்தியாவில் ஒரு பெண் அடித்தே கொல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடவுள் காப்பார் என்பது சரியா ?

நாட்டு மக்களைக் காப்பதற்கு அரசாங்கம் இருக்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால் எத்தனையோ நாடுகளில் மக்களைக் கொல்லும் கைங்கரியத்தை அந்தந்த நாட்டு அரசுகளே கச்சிதமாக நிறைவேற்றி வருகின்றன. பல இலட்சம் உயிர்களை காவு கொண்ட சக்கரவர்த்திகளும், மன்னர்களும் பெற்றெடுத்த ஆட்சி முறைமைதான் இன்று பசுத்தோல் போர்த்தி இருக்கிறது. இன்றைய ஆட்சித் தலைவர்களில் யாராவது மக்களைக் காப்பார்கள் என்று நம்ப உலகில் யாராவது இருப்பார்களா என்பது பலத்த சந்தேகத்திற்குரியது.

அரசுகளை விடுங்கள் சமுதாயம் காக்குமா என்பது அடுத்த கேள்வி. மரத்தில் பழங்கள் இருக்கும்போது அங்கு பறவைகள் கூட்டமாக வந்து அமர்ந்து கொள்ளும். பழங்கள் இல்லாதபோது பறவைகள் அடுத்த மரத்திற்கு பறந்து போய்விடும். எந்த மரத்தில் இருந்தேன், இப்போது எந்த மரத்தில் இருக்கிறேன், இனி எந்த மரத்தில் இருப்பேன் என்பதெல்லாம் பறவைகளுக்குத் தெரியாது. நம்மைச் சுற்றியிருக்கும் மக்கள் கூட்டம் போடும் ஆட்டத்தைப் பார்த்தால் பறவைகளுக்கும் இவர்களுக்கும் ஏதாவது பேதமிருக்குமா என்பது கேள்விக்குறி. இவர்கள் நம்மைக் காப்பார்கள் என்று நம்பலாமா ? மண் குதிரைகளை நம்பி ஆற்றில் இறங்கலாமா என்பது அடுத்த கேள்வி.

இது நமது கட்சி, இவை நாம் வகுத்துக் கொண்ட அரசியல் கொள்கைகள். இவைகள் நம்மைக் காக்கும் என்று பலர் நம்புகிறார்கள். அரசியல் சந்தர்ப்ப வாதத்துடன் தொடர்புடையது. அது நம்பியவர்களைக் காப்பதில்லை, சந்தர்ப்ப வாதத்தைத்தான் காக்கிறது. எத்தனையோ நாடுகளின் அரசியல் தலைவர்கள் அவர்களுடைய கட்சிகளாலேயே கழுத்தறுக்கப் பட்டிருக்கிறார்கள்.

இவற்றை எல்லாம் பார்த்துக் களைத்தவர்கள் கடைசியாக உறவினர்கள் காப்பார்கள் என்ற முடிவு செய்கிறார்கள். உறவு என்பது உள்ளத்தின் உண்மையான உணர்வால் ஏற்பட்டதல்ல. அது பிறப்பால் ஏற்பட்டது, ஏதோ சில வகைத் தொடர்புகளால் பலர் உறவுகளாக மாறியிருக்கிறார்கள். வெளிநாடுகளில் உறவுகளுக்குள் நடைபெறும் சண்டைகளையும், கேடுகளையும் பார்த்தால் உறவின் பாதகம் எப்படி மாறியுள்ளதெனப் புரியும். கணவன் மனைவியே எதிரிகளாகி விவாகரத்து செய்யும் சீரழிவைப் பார்த்த பின்பும் உறவுகள் துணையென யார்தான் நம்பப் போகிறார்கள் ? இப்படியும் மனதில் கேள்வி இருக்கிறது.

சமுதாயத்தில் படித்த அறிஞர்கள் இருக்கிறார்கள் அவர்களாவது நமக்கு உதவுவார்கள் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் பல படித்தவர்கள், பல்கலைக்கழகக்காரர் மக்கள் வெறுக்குமளவிற்கு நடந்து வருகிறார்கள். அரசியல் தலைவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கி சலுகை பெறும் பல்கலைக் கழகங்களையும் அந்த மேல் மட்டங்களில் நடைபெறும் ஊழல்களையும் பார்த்தால் அப்பாவிகள் அதிர்ச்சியடையத்தான் வேண்டிவரும். சென்ற மாதம் பல இலட்சங்களுக்கு பரீட்சை வினாத்தாள்களை விற்பனை செய்தவர்கள் பல்கலைக்கழக முனைவர்களே. இதையெல்லாம் கண்டு மனம் நொந்து வைத்தியசாலை போனால் அங்கு உலாவரும் வைத்தியர்களிடம் அகப்பட நேரும், அகப்பட்ட பிறகுதான் இங்குள்ள வைத்தியர்களையும், வைத்தியசாலைகளையும் சரியாக அறிய முடியும்.

பெற்றோர் துணையாக இருப்பார்கள் என்று கடைசி முடிவுக்கு வருகிறான் மனிதன். இன்றுள்ள பெற்றோரின் கனவுகளைப் பார்த்தால் அதில் மறைந்திருக்கும் அபாயத்தை எளிதில் விளங்கலாம். திருமணத்தின் போது வரும் சீதனப் பணத்தை எண்ணி மகிழும் பெற்றோரின் கரங்களைப் பார்க்கும்போதுதான் பிள்ளைகள் பல பெற்றோரை அடையாளம் காண்கிறார்கள். இன்று வெளிநாடுகளில் உள்ள பிள்ளைகளை வறுத்தெடுத்து வளமாக வாழும் பெற்றோர் நிறைய இலங்கையிலும் இந்தியாவிலும் இருக்கிறார்கள்.

கடைசியாக மிஞ்சுவது நட்பு ஒன்றுதான். நல்ல நண்பர்களே உலகத்தின் மிகப்பெரிய செல்வம் என்று சொல்கிறார்கள். நட்பு என்பது வெறுமனே உயிர் கொடுக்கும் உணர்ச்சியல்ல. நட்பு என்பது மிகமிக ஆழமான

அர்த்தம் கொண்ட சொற்பதம். உண்மையான நட்பு கோடான கோடி மக்களில் ஒருவருக்குத்தான் வாய்க்கிறது. பெரிய தொகையுள்ள லொத்தர் விழுந்தது போலத்தான் நல்ல நட்பின் பெறுமதி. புத்தர், இயேசு போன்ற மகான்களுக்கே நல்ல நட்பு வாய்த்ததாகக் கூற முடியவில்லை. இதற்குள் சாதாரண மனிதனுக்கு எங்கே கிடைக்கப் போகிறது நல்ல நட்பு.

இனி விடயத்திற்கு வருவோம் –

இப்படியே பட்டியலிட்டுக் கொண்டு சென்றால் கடைசியில் எது மிஞ்சப் போகிறது ? எதுவுமே இல்லை. வாழ்வு பூச்சியமாகத்தான் நிற்கும். இவைகளை எண்ணி நம்பிக்கை இழந்த மனம் விரக்திக்குள் பிரயாணம் செய்யும். அதுவே பலருடைய வாழ்வுக்கு முடிவாகவும் வந்திருக்கிறது.

இந்த எளிமையான உண்மையை பல சூத்திரங்களைப் பயன்படுத்தி ஆய்வு செய்தார் தத்துவஞானி கிர்கோர் என்பவர். எல்லாவற்றின் போலிமைகளையும் கண்டு, கண்டு அவற்றை உதறியபடியே முன்னேறியது அவருடைய அறிவு. தட்டுங்கள் திறக்கப்படும் என்று இயேசுநாதர் சொன்னதுபோல அறிவுக்குத் தடையாக உள்ள ஒவ்வொரு கதவுகளையும் தட்டியபடி சென்றார். எல்லாக் கதவுகளும் திறந்தன, இறுதி முடிவென்ன ? எதுவுமே இல்லாத வெற்றிடமே கடைசியில் எஞ்சியது.

ஒன்றுமே இல்லாத இருட் பெருவெளி அச்சமூட்டியது. தத்துவத்தின் முடிவில் எதுவும் இல்லை என்று இறுதியாக எழுதி வைத்துவிட்டு சிறுபிள்ளைகளுடன் விளையாடித் திரிந்து தனது கடைசிக் காலத்தை முடித்தார். எல்லாவற்றையும் துறந்து கோவணாண்டியாக வலம்வந்த பட்டினத்தார் கூட கடைசியில் சிறுவர்களுடன்தான் ஒளித்து விளையாடினார். அப்போதுதான் அவருக்கும் மோட்சம் கிடைத்தது. கிர்கோரின் முடிவும், பட்டினத்தாரின் இறுதி அனுபவமும் ஒன்றுதான்.

மேலே சொன்ன உதாரணங்களைப் பார்த்தால் பெற்றோர் முதல் யாவுமே நமக்கு எதிராக இருப்பதைப் போலவே காட்சிதரும். இப்படியான உலகில் நின்று கொண்டு அன்னை தெரேசா என்ன செய்தார் என்று நோக்குவோம். அன்னை தெரேசாவிற்கும் அப்படியொரு காட்சி ஏற்பட்டது. இந்த எதிர்மறை நிகழ்வுகளுக்கு ஏது பதிலடி? அவர் ஆழ்ந்து சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தார்.

மற்றவர் உனக்கு எதிராக தீமை செய்தால் அவர்களுக்கு எதிராக நீயும் செயற்படு என்றார். அன்னை தெரேசாவை கடவுளாக்கிய ஒரேயொரு வரி இதுதான். இந்த வரியைப் பார்த்தவுடன் அடிக்கு அடி, குத்துக்குக் குத்து, வெட்டுக்கு வெட்டு என்று அன்னை தெரேசா சொல்கிறார் என்று எண்ணிவிடக் கூடாது. மற்றவர் நமக்கு எதிராக தீமைகள் செய்தால் நாமும் அதுபோல தீமைகளை செய்யக்கூடாது. தீமைக்கு எதிர் என்ன அதுதான் நன்மை. மக்களில் நன்மை செய்யத் தெரியாது தீமை செய்வோருக்கு எதிராக நாம் நன்மைகளை செய்ய வேண்டும் என்றார்.

தன் கருத்தில் உறுதியாக இருந்தார். எந்தச் சுயநலங்களும் இல்லாமல் தன்னைத் துறவியாக்கினார். தீமைகளே வடிவாக நிற்கும் இந்த உலகத்திற்கு எதிராக நன்மையையே செய்வதென முடிவு செய்தார். நன்மையை மட்டும் செய்யும் ஒரு மாபெரும் உலகப் போரை அவர் பிரகடனப்படுத்தினார். தெய்வம் அவரிடம் வந்தது. அவருடைய கைபட்டு பலருடைய நோய் குணமாகியது. சென்ற நு}ற்றாண்டில் வாழ்ந்த மனிதர்களில் உலகம் முழுவதும் தெய்வப்பிறவியாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர் அவர் ஒருவர்தான்.

எனவேதான் இந்த உலகில் நமக்கு யாருமே இல்லையென ஒருபோதும் எண்ணிவிடக் கூடாது. நன்மை செய்யும் போரைத் தொடங்கினால் உலகில் உள்ள எல்லோரையும் வெற்றி கொள்ள முடியும். நமக்கு யாருமே துணையில்லை என்று விரக்தியடைவது மாபெரும் தவறு. நாம் யாருக்கு துணையாக இருந்தோம் என்று எண்ணுவதே சரியானது. தத்துவத்தின் முடிவிலும், வாழ்வின் முடிவிலும் எதுவும் இல்லை. இப்போது கையில் இருக்கும் இந்த வாழ்வு மட்டும்தான் நிஜமானது. அதை ஒருபோதும் நம்பிக்கை வரட்சிக்குள் தள்ளக் கூடாது.

ஆரம்பத்தில் பட்டியலிட்ட தவறுகள் சரிபோலத் தெரிந்தாலும், அந்தத் தவறுகளின் மூலக் கூறுகளின் ஓரங்கமே நாமும் என்று உணர வேண்டும். ஏன் நாமே தீயவராக இருக்க்கூடாது என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். நமது பிழைகளை திருத்த வேண்டும். நாம் காணும் சகல காட்சிப் பொருட்களும் ஆண்டவன் நமக்களித்த அரிய காட்சிகளே ! அவை நன்மையாகவும், தீமையாகவும் சுழலுகின்றன. உலகத்தில் தோல்வி இல்லாத, வெற்றி மட்டுமே உள்ள ஒரேயொரு போர் நன்மை செய்யும் போர்தான். அந்தப் போரைச் செய்வோருக்கு உலகம் விரக்தியானதல்ல அதுவே சுவர்க்கம். அன்னை தெரேசா சொன்ன ஒரேயொரு தத்துவம் அதுதான்.

திசைதெரியா நடுக்கடலின் மேலே தன்னந்தனியனாகப் பறக்கிறது கொக்கு ! புயல் வரலாம், நோய் வரலாம், அருகில் வீடில்லை, உறவில்லை, சமுதாயம் இல்லை, காப்பதற்கு யாருமில்லை, குடிப்பதற்கு நீரோ, அடுத்த வேளை உணவோ அதனிடமில்லை. அதோ பாருங்கள் பறந்து போகிறது கொக்கு ! அது யாரை நம்பிப் பறக்கிறது ? எண்ணிப்பாருங்கள்.