அஸ்தமனத்தை அறிவிக்கும் எங்கள் அதிகாலைகள்
பூபாளத்திற்கு பதிலாக முகாரியையே முன்வைக்கும்
பூமியில் கேட்கும் முழக்கங்களால்
மேகங்கள் மோதிக்கொள்வதை நிறுத்தி வாய்பொத்தி நிற்கும்
துரத்திக்கொண்டுவரும் துப்பாக்கி ரவைகளால்
தென்றல் காற்று கிழிபடும்.
‘ஷெல்’லக்குழந்தைகள் மனித பொம்மைகளின்
அங்கங்களை கழற்றி விளையாடும்
பொட்டிழந்த எங்கள் பெண்ணிலவுகளை
சோக மேகங்கள் ஆக்கிரமித்துக்கொள்ள
அமாவாசை அவர்களிடம் நிரந்தரமாகும்.
குருதியலைகள் மோதிப் பாய்ந்து கீழ்வானை சிகப்பாக்கும்
-விவேக்-
'தடயங்கள்' கவிதைத் தொகுப்பிலிருந்து