மனித நேயம் எங்கோ
பதுங்கிக்கொண்டபோது – வெறும்
மண்டை ஓடுகளே இங்கே விதைக்கப்பட்டன
பூவும் கொடியுமாய்ப்
பூத்துப்பொலிந்த – எங்கள்
கிராமத்து மண்ணிலெல்லாம் – இன்று
எருக்கலை மட்டும் பூத்திருக்கு!
பச்சை மரங்கள்
காற்றசைவில் படபடக்ககூட
அச்சப்பட்டு வாழ்கின்றது
எங்கள் அயலட்டம்..
இருண்டுவிட்ட தெருவோரத்தில்
இரவிரவாய்த் ‘தேடுதல்’நடக்கும்
இங்கொன்று அங்கொன்றாய்
எம்மவர் காணாமல் போவர்…
தேசத்தின் பிறிதொரு மூலையில்
அடையாளம் காணப்படாதவர்களாக
புலிச் சின்னம் பொறித்து – அவர்கள்
புதைக்கப்படுவார்கள்
தேசம் ‘வழமைக்குத் திரும்பியதாக’
தெற்கில் செய்தி வரும் – ஆம்
இவைகள் தான் வடக்கிலும் கிழக்கிலும்
வழமையான செய்திகள்
தனேஸ்-
நன்றி: மாணவர் முரசு