பத்திரமாய் இருக்கிறது
பாதுகாப்புப் பெட்டறையில்
உன் கடிதம்.
அவ்வப்போது எடுத்துப்
பார்க்கிறேன்
பிரிக்கும்போதே
மடிப்புகளில் விரிசல்
பழுப்பேறி விட்டாலும்
பழைய தாளிலும் உன்
பளிங்கு உடல் வாசம்
முத்தான கையெழுத்து உன்
முறுவலைப் போல.
ஒவ்வொருவருக்கும்
கையெழுத்துப்
பிரத்தியேகமாம்
தனி மனித
அந்தரங்கம்
மன நிஜத்தின்
நிழல்
கையெழுத்தில்
அவரவர்தம்
தலையெழுத்தைக்
கூறலாமாம்
எனக்குத் தெரியவில்லை.
சில விஷயங்கள்
தெரியாமலிருப்பதே
நல்லதுதான்.
கவிதையாய் எழுதிவிட்டுக்
கடிதமென்று சொல்வாய்.
கவிதைக்குத்தான்
பொய் அழகு
வாழ்க்கைக்கு அல்ல
உண்மைகளை உதறிவிட்டு
ஒருநாள் சென்றுவிட்டாய்.
மறந்தே போனாயா
மறைந்தே தான் போனாயா?
என்றாவது நீ
வருவாயென்று
காத்திருக்கும்
என்னோடு
உன் கடிதமும்.
– ஷைலஜா