Design & Development
Graphic Designing | Web Development
‘எழில்நிலா’ இணையத்தளத்திலிருந்து சேமிக்கப்பட்ட சில ஆக்கங்கள்
Some articles archived from ‘ezilnila.ca’

குறளும் நிகழ்வும்

எழுதியவர்: நளினி மகேந்திரன்

குறளும் நிகழ்வும் 2

"இன்பம் விழையான் வினை விழைவான் தன்கேளிர்
துன்பந் துடைத்தூன்றும் தூண்"


நீண்ட நாட்களின் பின் மகேசனும் சந்திரனும் பாபுவும் ஒரு அங்காடியிலே தற்செயலாக சந்தித்துக் கொண்டனர். ஒவ்வொருவரும் தங்கள் சுக துக்கங்களைப் பரிமாறினர். அப்போ சந்திரன் பாபுவைப் பார்த்து என்ன ஆள் கால்வாசியாப் போனீர். என்ன ஏதும் வருத்தமோ என்று தயங்கியபடியே கேட்டான். அதற்கு பாபுவோ ஒரு புன்னகையையே பதிலாக்கினான்.
அந்த விரக்திப் புன்னகையின் அர்த்தங்களை யாரால் தான் புரிந்துகொள்ளமுடியும். அது என்னவென்னவென்றால் பாபு இரண்டு வேலையெல்லே செய்கிறார். காலை ஆறுமணிக்கு வீட்டால வெளிக்கிட்டால் இரவு இரண்டு மணிக்குத் தான் வீட்ட வாறவர். ஆனமான நித்திரையும் சாப்பாடும் ஆளுக்கில்லை என்றான் மகேசன். அப்படியென்றால் பாபுவிடம் நிறையக் காசிருக்கும் என்ன வட்டிக்குக் கொடுக்கிறீரோ அல்லது.. என்று இழுத்துவிட்டு. அது சரி இன்னும் அப்பாட்மென்டில் தான் இருக்கிறீரோ என்று ழூச்சுவிடாமல் அடுக்கிக் கொண்டே போனான் சந்திரன். ம்.. . என்று ஒரு நீண்ட பெருழூச்சொன்றை விட்டான் பாபு. பின் சொல்லத் தொடங்கினான். என்னை நம்பி அங்க ஊரில் எத்தனை ஜீவன்கள் இருக்கு என்ற அம்மா, அப்பா, அக்காமார் அண்ணாமார் அதைவிட பெரியப்பா குடும்பம், என் மனைவியின் குடும்பம் என்று அடுக்கிக் கொண்டே போனவன். இடையிலே நிறுத்தி மீண்டும் பெருழூச்சொன்றை
விட்டான். நான் அனுப்புகின்ற காசு அவையளுக்கு கால் வயிறு கஞசிக்கே காணாது என்று நான் யோசித்துக் கவலைப்படுகிறன் உங்களுக்குப் பகிடியா இருக்கு. உங்களுக்கென்ன இங்கால எல்லாரும் இருப்பதால் பிரச்சனை கவலை என்பது குறைவு என்றான் பாபு விசனத்துடன். அதற்கு மகேசன் ஆமாம் நாம் பிறருக்கு உதவி புரிய வேண்டுமானால் துன்புற்றுத்தானாக வேண்டும். உழுவதனால் துன்புறுகின்ற பூமி பயிரையும் அதன் மூலம் தானியத்தையும் நமக்குத் தருகின்றது. திரி எரிந்து வேதனையுற்று எமக்கு ஒளியைத் தருகின்றது. ஆகவே இன்பம் விழையாது உழைத்துத் துன்பத்தை வரவேற்று தொழில் புரிகின்ற ஒருவன் தன் உறவினருடைய துன்பத்தை நீக்கி உறுதி செய்கின்ற தூண் போன்றவனாவான்.
இதைத்தான் வள்ளுவரும் இப்படிக் கூறியுள்ளார் என்று கூறியவன் அந்தக் குறளை யாவரும் கேட்கும்படியும் கூறினான்.

இன்பம் விழையான் வினை விழைவான் தன்கேளிர்
துன்பந் துடைத்தூன்றும் தூண்

முற்றும்.