"உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும் இவ் வூர்"
சத்தியா தன் குழந்தைகளை பூங்காவில் விளையாடவிட்டபின்னர் தான் அங்கு போடப்பட்டிருந்த வாங்கு ஒன்றிலே
அமர்ந்து கொண்டாள். அவளுடைய கண்கள் தனது பிள்ளைகள் மேல் படிந்திருந்தாலும் அவள் மனமோ சஞ்சலத்தால்
குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் அவள் தோழி பத்மா அங்கே வந்தாள். இருவரும் உரையாடிக் கொண்டிருந்தனர். பக்கத்து வாங்கிலே அமைதி தேடி வந்திருந்த சிவலிங்கம் வாத்தியாரின் காதுகளிலும் அவர்களது உரையாடல் விளவே செய்தது. தலையைப் பின் வாங்கிலே சாய்த்தபடி கண்களை இறுக ழூடிக் கொண்டு தனது காதுகளை மட்டும் கூர்மையாக்கி அவர்களது உரையாடலை உற்றுக் கேட்டுக்கொண்டிருந்தார் அவர்.
சத்தியாவோ அவளுக்காகவே காத்திருந்தவள் போல தன் துன்பங்களை எல்லாம் பொல பொலவென உதிர்த்துக்கொண்டிருந்தாள்.
ஆமாம் சத்தியாவின் கணவன் மோகன் ஓரு ஏஜென்சி வேலை பார்ப்பவர். அவர் இரண்டு வருடங்களாக சத்தியாவைப்
பார்க்கவென்று வரவில்லை இதை ஊரார் உற்றார் உறவினர் விடுவார்களா? வேறும் வாயிலே அவல் கிடைத்த
மாதிரித்தான்
அவள் கதையும் ஆகிவிட்டது. அதனால் தான் அவளுக்கு இந்த சோகம்.
சத்தியா தொடர்ந்தாள். பத்மா உமக்குத் தெரியும் நானும் அவரும் பாடசாலையில் படிக்கும் போதிருந்தே காதலர்களாகவே இருந்தோம். இப்போதும் கூட என் காதலாராக என் இதயத்துள் சந்தோசமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் அதை அவர் தெரியாமல் பிரிந்து வாழ்கிறார். இவ்வூராரோ அவரை அன்பில்லாதவர் என்று பழிக்கின்றார்கள். என்று கூறி அழ ஆரம்பித்து விட்டாள். சிவலிங்கம் வாத்தியாரோ தனது வாயிற்குள் இக்குறளை முணுமுணுத்தார்.
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும் இவ் வூர்
முற்றும்.