அறுவடை முடித்த வயல்கள் வெளிச்சோடின
ஒரு சிறங்கை மணிகூடக் கிட்டவில்லை நமக்கு.
காற்று அடித்ததுதான்
எடுத்துத் தூற்றவில்லையே எம் நெற்சூடு.
மழை பெய்தது
எம் தாமரைக்குளத்துக்கு மட்டும்
தண்ணீர் வரவில்லை.
வெளி வீதி சுற்றி
காவடி தோளிருந்து இறங்கும்
நேரம் வந்தாச்சா?
வலிக்கிறது தோள்மூட்டு
வரமேதும் கிட்டவில்லையே நமக்கு.
ஈழத்தமிழர் மீண்டுமொருமுறை
இளிச்சவாயர் ஆனோமா?
பூ மலரும் வடிவு பார்க்க
வாசலிருந்தோம் நம்பிக்கையுடன்.
பூவும் மலரவில்லை
பூ மரத்தின் வேரும் தெரியவில்லை.
நிலவு பார்க்கும் ஆசையில்
இரவெல்லாம் விழித்திருந்தோம்.
நிலவையும் காணவில்லை
விழித்திருந்த இரவையும் காணவில்லை.
பத்து நாள் அலங்காரத்திருவிழா
முற்றுப்பெறுகின்றது.
எஞ்சியிருப்பது கொடியிறக்கம் மட்டுமே.
சிகரங்கள் இறங்குகின்றன.
சின்னமேளங்கள் போய்விட்டன.
தவில்காரரும் புறப்படுகின்றனர்.
காப்புக்கடைகளைக் கலைத்து
கட்டத்தொடங்கியாயிற்று.
சில கடலைக்காரரே மீதி.
இனி அவர்களும் போய்விடுவார்கள்.
எல்லோரும் போகலாம்.
கோவில் வீதிக்குடியிருப்பாளர்கள்
எங்கே போவது?
ஜிகினா வெளிச்சத்தில் குதித்த அலுப்புத்தீர
ஒரு பகல் உறங்கலாம்
அதன்பிறகு என்ன?
வேள்வி நடத்த கோயிலில்
அலங்கார உற்சவத்துக்கு ஆசைப்பட்டோம்
நடந்தது என்ன?
கூத்து நடந்தது பார்த்துப் பரவசமடைந்தோம்.
இப்போ கூத்தும் முடிந்துவிட்டது.
எந்த வாழ்வும் கிட்டவில்லயே எமக்கு.
எங்கேனும் சின்னக்கிளைகளில்
அரும்பு கட்டத்தொடங்கினால் போதுமே
ஆதிக்க மாடுகள் அதனை மேய்ந்துவிடுகின்றன.
அழகிய ஜீவிதத்திற்காக
சின்னக் கூடு கட்டுவோமென
சிட்டுக்குருவிகள் சுள்ளி பொறுக்கினாற்கூட
பருந்துகள் பொறுத்துக்கொள்வதில்லை.
குருவிகளை அடித்து வாயிற் போடுகின்றன.
நம் வயலின் விதைப்புக்கு நாமுழுதாற்கூட
அண்டை வயற்காரன் சண்டைக்கு வருகின்றான்.
ஈழத்தமிழருக்கு
இது எழுதிவைத்த விதியாச்சு.
எட்டு மூலைப்பட்டம் கட்டி இரவிலேற்றினோம்.
விடியும்வரை விண்சத்தம் கேட்டது.
பட்டத்தைத்தான் எவரும் பார்க்க முடியவில்லை.
சப்த நதிகளும் கூடி
அட்ட திக்கு யானைகளும் கூடி
ஊரையடித்து உலையிற்போடும்
பகாசுரர்களும் கூடி
எமக்கு பந்தி பரிமாற வந்தனர்.
பாயாசம் என்றனர்.
வாழையிலை விரித்து வரிசையிலிருந்தோம்
என்ன விழுந்தது இலையில்?
ஆக்கித் தந்ததும் ஒன்றுமில்லை.
தூக்குச் சட்டியிலும் ஒன்றுமில்லை.
மின்சாரம் வந்தது,
எரிசாராயம் வந்தது,
டயலொக் வந்தது,
மொபிற்றல் வந்தது,
அங்கர் பட்டரும்
மக்கி நூடில்சும் வந்தது,
பிதாமகன் வந்தான்,
போய்சும் வந்தார்கள்
எமக்கான விடுதலைதான் வரவில்லை.
வீதியெங்கும் விளம்பரப் பலகையும்
காதிலெங்கும் சமாதானப் பாடலுமாய்
விளங்குகின்றன நம் ஊர்கள்.
ஈழத்தமிழனே!
பட்டும் பட்டும் உனக்கேனடா புத்தி வரவில்லை.
ஒன்றில் போராடு
இல்லையேல் சரணாகதி அடைந்துவிடு.
இரண்டுக்குமிடையில் நின்று நசிந்து விடாதே.
உன் தாகத்துக்கு நிறைவான தண்ணீரை
எவரும் தரமாட்டார்கள்.
வாய் நனைக்க மட்டுமே வார்ப்பார்கள்.
நீ சொண்டைத்தான் நக்க வேண்டி வரும்.
பேய்களுக்கும் முனிகளுக்குமிடையே
பெரிய வேறுபாடுகளில்லை
ஒன்று கடிக்கும்
மற்றது அடிக்கும்.
எதிரே வருபவன் பலவானென்றால்
இரண்டுமே ஒன்றாகிவிடும்.
எரிகிற கூரையில் கொள்ளியெடுத்து
சுருட்டுப் பற்றவைத்தானாம் கிழவனொருவன்.
பக்கத்து வீட்டுக்காரனின் கதைதான்.
எமக்குப் பழைய கதையாச்சே.
உலகெங்கும் டெங்குக் காச்சலாம்
அவரொருவர் நுளம்புநாசினி விசுறுகின்றார்.
இறுதியில் நுளம்பு இங்குதானென்று
மகாபிரபு மருந்துடனும் வரலாம்..
வருபவர்கள் எல்லோரும் வரட்டும்.
முதலில் நீ முதுகிற் கூனலில்லாமல்
முற்றத்தில் நில்
உடுக்கடித்து ஆடப் பழகு.
தலையில் தலைப்பாகை கட்டு.
நறுக்குத் தெறித்தாற் போல
உன் வாயிலிருந்து வார்த்தைகள் வரட்டும்.
நீ திரும்பினால்
திசைகளும் உன்னோடு திரும்பட்டும்.
நீ பாடினால்
பட்ட மரத்திற்கூடப் பால் தெறிக்கட்டும்.
மழையுன் தோளின் கீழேயே பெய்யும்படியாய்
தலையை முகிலுக்கு மேலே வைத்திரு.
இத்தனைபேரையும் குழியில் விதைத்தது
தேர்தலில் நிற்க அல்ல.
தெருக்களைச் செப்பனிட அல்ல.
மாகாண சபையின் நிர்வாகமெடுத்து
மதவு கட்ட அல்ல.
வேண்டும் எமக்கு கூண்டில்லா வாழ்வு.
வேண்டும் எமக்கு விடுதலைக்கான சிறகு.
-'உலைக்களம்' வியாசன்.