நிலாவைக் காட்ட நீண்டது விரல்
எவ்வளவு அழகான விரல்’ என்றான் ஒருவன்
‘நகம் முத்துச்சிப்பியைப்போல் இருக்கிறது’ என்று கவிதை புனைந்தான் ஒருவன்
அது ஒன்றுக்குப்போகவேண்டும் என்கிறது’ என்றான் ஒருவன்
‘இல்லை அது அதட்டுகிறது’ என்றான் ஒருவன்
ஒரு மோதிரம் கொண்டுவந்து போட்டான் ஒருவன்
மருதாணி தடவினான் ஒருவன்
ஞாபக முடிச்சிட்டான் ஒருவன்
விரலின் ரேகைகளில் பயணம் செய்தார்கள் சிலர்
பிறகு-விரல் வெட்டியெடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
ஆரம்பமாயின வழிபாடுகள்
ஆனால் யாரும் பார்க்கவில்லை நிலாவை
-அப்துல் ரகுமான் –