பாடசாலை விடுமுறை எனவே நிசா நீண்ட நேரம் படுத்திருந்தாள். ”இப்ப டீவீயில நல்ல புரோகிராமுகள் போகும். ஆனா
இன்னும் அம்மாவும் அப்பாவும் எழும்பேல்ல. இப்ப நான் டீவியப் போட சத்தங் கேட்டு அம்மா எழும்பினான்டா என்ற
கதி அதோ கதிதான். நான் மற்ற நாளையில டேக்கெயருக்கெண்டு போறதால எனக்கு உந்தப் புரொகிராம் எல்லாம்
பார்க்கக் கிடைக்கிறேல்லத்தானே. சத்தத்தக் குறைச்சு மெல்லமாப் பார்த்தாலென்ன? ஐயோ வேண்டாம்
இப்பிடித்தானே அன்றைக்கு நான் பார்த்துக்கொண்டிருக்க அம்மா எழும்பி வந்து கத்திப் போட்டு அன்டைக்கு
முழுக்க என்ன டீவி பாக்கவே விடேல்ல. நான் மற்றக் கிட்ஸப் போல தேவையில்லாத புரொகிராம்சே பாக்கிறன். இது
ஏன் அம்மாக்குத் தெரியுதில்ல. அம்மாட கத்தல விட பேசாமப் படுத்திருப்பம்.” என்று குப்புறப் படுத்துக்
கொண்டாள் நிசா. அவளிடமிருந்து ஒரு ஏக்கப் பெருமூச்சு வெளிப்பட்டது. நிசா கண்களை மூடினாள். நித்திரை வர
மறுத்தது. அவள் தன் பெற்றோர் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தாள்.
முன்வீட்டு ஜானியிடம் இருப்பது போல ஒரு பாபி டோ ல் வாங்கித்தரச்சொல்லி நேற்று நான் அப்பாட்ட கேட்டன்.
அதுகும் நானா கேக்கேல்ல. அப்பா என்ன மடியில தூக்கி கொஞ்ச நேரம் வைத்திருந்தவர். அப்பத்தான் என்ன வேணும்
என்ட நிசாக்குஞ்சுக்கு என்றார். அப்ப நான் பாபிடோ ல் என்டன். அதில என்ன பிழை. அம்மாக்கு சரியான கோவம்
வந்திட்டுது. இடுப்பில கையையும் வைச்சுக்கொண்டு வந்து ஓமோம் நீங்கள் அவளுக்கு நல்லாச் செல்லம் குடுங்கோ.
கண்டது நிண்டதுகளையெல்லாம் வாங்கிக் காசக் கரியாக்குங்கோ. அங்க அதுகள் ஊர்ல
படுற கஸ்டங்கள நினைச்சாத்தானே. அப்பா பாவம் பேசாமல் இருந்துவிட்டார். ஏன் அம்மா இப்பிடி கத்துறா? ரெண்டு
பேரும் வேலைக்குப் போகினம்தானே. யார் யாருக்கோ பிறந்தநாள் என்டோன்ன அவளுக்கு அது விருப்பம் இது
விருப்பம் அது அவனிட்ட கிடக்கு இத வாங்குவம் இது நல்ல வடிவாக்கிடக்கு என்று எடுப்பினம். அப்பா ஏதும் அது
விலையாக்கிடக்கு வேற எடுப்பம் என்டா அம்மாக்கு கோவம் வரும். என்னப்பா விலை குறைஞ்சதில வாங்கினா அதுகள்
எங்களப்பற்றி என்ன நினைக்குங்கள் என்பா. முந்தியெல்லாம் யாருக்கும் ரோய்ஸ் வாங்கப் போனா எனக்கும் வேணும்
என்று அழுவன் அம்மாவின் அதட்டலுடன் நான் அடங்கிப் போவன். இல்லாட்டி பிறகு வரேக்க வாங்குவம் என்பார்கள்.
அது என்னை ஏமாற்ற.
நாள் போகப் போக நான் எதுவுமே கேட்கிறேல்ல. கேட்டால் வீட்டிலயே விட்டுட்டுப் போயிடுவினம். அப்ப எனக்கு கடையில இருக்கிற டொயிசத்தன்னும் தொட்டு விளையாட முடியாமக்கூடப் போயிடும்தானே.
யாரும் ஏதும் கொண்டுவந்தா ஆக்களுக்கு முன்னால வைச்சு உடைக்கக் கூடாதாம். அன்டைக்கு இப்பிடித்தான் அன்டன் அங்கிளாக்கள் என்ர பிறந்தநாளுக்கென்டு வடிவான பேப்பர்ல சுத்தி ஏதோ கொண்டு வந்திருந்தினம். எனக்கெண்டா எப்ப உடைப்பன் என்டிருந்தது. ஆனா அம்மா என்னப் பாத்து உடைக்கக் கூடா என்று கண்ணைக் காட்டினா. நானும் எப்ப அவையள் போவினம் என்று பாத்துக்கொணடிருந்தன். அவையள் போன உடன ஒரே ஓட்டமாப் போய் அத எடுத்து உடைக்கத் தொடங்கினன். அது ஒரு வடிவான கார். அம்மா உவள் பெட்டைக்கென்னத்துக்குக் கார. உத உப்பிடியே பக்குவமா வை. யாருக்கேன் குடுக்கலாம் என்றா. சொன்னாப்போல நாளைக்கு என்ற பிரென்ட் வீட்ட லஞ்சுக்குப் போகேக்க அவட மகனுக்கு ஏதேன் வாங்கத்தானே வேணும் சொல்லிக்கொண்டே அதை வாங்கி எனக்கு எட்டாத தூரத்தில வைச்சிட்டா. நான் அழுதால் இரண்டு அடி கிடைக்கும் அதவிட பேசாம இருக்கலாம். நிசாவின் கண்கள் கலங்கின. அந்தக் காரை ஏக்கத்துடன் பார்த்தாள்.
ஜானி அதுதான் முன்வீட்டில் இருக்கிற கேள் இப்ப என்ன செய்வாளாயிருக்கும். அவளுக்கென்ன எத்தின ரோய்ஸ் இருக்கு டீவி பாத்தாக் கூட அவட அம்மா ஒன்றுமே சொல்லமாட்டா. அன்டைக்கு நான் போகைக்க அவட அம்மா ஜானிக்கு தலை வாரிக்கொண்டிருந்தா. ஓரு பெரிய பெட்டி நிறைய விதம் விதமான கிளிப்புகள் ரிபன்கள் இன்னும் என்னென்னவோ எல்லாம் கிடக்கு அவள் கொடுத்து வைச்சவள். ஜானி என்னப் போல நேரத்திற்கு எழும்பவும் தேவையில்ல. அவக்கு விளையாட தங்கையும் வேற இருக்கிறா. எனக்கும் அக்கா இருக்கிறா தான். ஆனா அவ என்னவிடப் பெரியவ. அவவிற்கு என்னோட விளையாட நேரம் இல்ல. அநேகமா எங்கட அன்டி வீட்டில தான் அவ இருப்பா. அவவின்ட பழைய உடுப்பெல்லாம் அம்மா பக்குவமா வைச்சு எனக்குத் தருவா. அன்டைக்கு ஜானி வீட்ட நான் போனபோது ஜானி ஓடி ஓடிக்கொண்டிருந்தாள். அவள் அம்மாவும் அவள் பின்னால ஓடினாள் ஏனென்டா ஜானிட தலைய வடிவா இழுத்து கட்டத்தான். பின் ஜானியைப் பிடித்துவிட்டாள். அவளை கட்டிப்பிடித்து அவள் கன்னங்களிலே விடாமல் கொஞ்சினாள். முதல்ல
தலையெல்லாம் வடிவாக் கட்டினாப்பிறகு நாங்க விளையாடுவோமாம் என்றாள். என்ட அம்மாவ நினைச்சுப் பாத்தன். ஏய் நிசா இங்க வா உந்தத் தலைய இழுத்துக் கட்டக் கூடாதே பார் எப்பிடி இருக்கென்று. உதுக்கு உனக்கென்ன வயது காணாதே. போ போ போய் கட்டு. எனக்கு நிறைய வேலை கிடக்கு என்பா. எப்போதாவது அம்மா கட்டத் தொடங்கினால் சிறிதும் ஆட்டக் கூடாது. சிறிது ஆட்டினாலும் தலைல ஒரு குட்டு உடன தந்திடுவா.
படுக்கையிலிருந்தபடியே பலவற்றையும் யோசித்துக் கொண்டிருந்தாள் நிசா. ஓ கிச்சினிற்குள்ள சத்தம் கேட்குது. அப்பா எழும்பிட்டார் போல. கண்களை இறுக மூடிக் கொண்டாள். யாரோ கதவைத் திறக்கினம். ஆ போட்டினம் போல மெல்லக் கண்களை திறந்து பாத்தாள். யாருமில்லை. போட்டினம் போல. இந்தா யாரோடையோ சத்தங் கேட்குது. அது அம்மாவாத்தான் இருக்கும். நிசா எழும்பேல்லயே எழும்பி முகத்தக் கழுவிப் போட்டு வாவன்.
இது அம்மா தான். அம்மா போட்டா. இப்ப எழும்பியும் என்னத்த செய்யிறது? என நினைத்தவள் மறுபுறம் திரும்பிப் படுத்தாள். அம்மாவும் அடிக்கடி நிசா எழும்பன் என்று கத்தியபடியே இருந்தார். உவளுக்கு ஒருக்காச் சொன்னாக் கேட்க மாட்டாள் பொம்பிளப் பிள்ள பழகுறா பழக்கம் என புறுபுறுத்துக் கொண்டு வேறு இருந்தா. ஏன் ஒருக்கா வந்து என்ற தலையத் தடவி நிசாம்மா எழும்பு என்று சொல்லக் கூடாதே. ஓருக்கா என்னக் கொஞ்சி விடக் கூடவா அவவிற்கு நேரமில்லை. ஏதோ நினைத்தவளாக நிசா மெல்ல எழுந்து போய்ச் சோபாவிலே அமர்ந்தாள். நானென்ன டீவிய இப்ப போட்டனானே ஏன் இந்தக் கத்தல். பேசாமல் முகங் கழுவப் போனாள் நிசா. அறைக்குள் வந்தவள் தன் உடைகள் யாவும் உயரத்திலிருந்தன. எட்டிப் பார்த்தாள். எட்டவில்லை. அம்மாவக் கூப்பிட்டா கத்துவா. என்ன செய்யலாம்? என்று யோசித்தபடியே கட்டிலில் அப்படியே அமர்ந்து விட்டாள். நிசா என்ற அதட்டல் அவளைத் திடுக்கிட வைத்தது. தன்னைச் சுதாகரித்தபடி நிமிர்ந்தாள். என்னடி யோசின உடுப்ப மாத்தி தலைய இழுத்துக் கொண்டு சாப்பிட வா என்றார். அம்மாவைப் அப்படியே பார்த்தபடி இருந்தாள் நிசா. அவள் மனம் கூறியது இவ்வளவு கத்துறாவே நான் சின்னப் பிள்ள எனக்கு உந்த உயரத்தில உடுப்பு எட்டாது என்று ஏன் விளங்கேல்ல. என்னடி அப்பிடிப் பாக்கிற உந்த முறைக்கிற பழக்கத்த விட்டுடு சரியே மீண்டும் உறுமல். நிசா மெதுவாகத் தன் உடைகளைக் கழற்றத் தொடங்கினாள். அம்மா போகப் போனாள். அம்மா என்றாள் நிசா மெதுவாக. என்ன என்று கத்திய படி திரும்பினாள் அம்மா. எந்தச் சட்டை போடுறது. என்று தயங்கினாள் நிசா. உடைகளை எடுத்து கட்டிலின் மேலெறிந்த அம்மா உந்த வீட்டில எல்லாம் நான் தான் செய்ய வேணும் எனப் புறுபுறுத்தபடியே போய் விட்டாள். ஜானின்ட அம்மா என்டா ஜானிக்கு முகங் கழுவி சட்டையெல்லாம் போட்டு தலையிழுத்து சாப்பாடு தீத்தியெல்லாம் விடுவா. ஏன் என்ட அம்மாக்கு ஏலாது?
மெல்ல வெளியே போனாள் நிசா. மேசையில் பட்டர் பூசின பாணும் ஆறின பாலும் கிடந்தது. பார்க்கவே பிடிக்கவேயில்லை. மெல்ல மெல்ல வில்லங்கமாகச் சாப்பிட்டாள். முடியவில்லை. இதற்குமேல் முடியாது. மெல்லப் பாலைக் குடித்தாள். பால் நன்கு ஆறியிருந்தது. நிசாவின் கண்களிலிருந்து கண்ணீர் ஒழுகியது. ஏன் எனக்குப் பிடித்த சாப்பாடு செய்து தர இவர்களால் முடியவில்லை. ஜானியின் அம்மா என்ன என்ன சாப்பாடெல்லாம் விதம் விதமா செய்து தாறா. சாப்பிடேக்க எத்தின கதையெல்லாம் சொல்லுவா. சாப்பாடு செய்ய முதல் என்ன வேணும் என்றாவது கேட்கக் கூடாதாஎன்ன? உனக்குச் சாப்பாடு தாறதென்டா பொpய பாடுதான். சுhப்பிட ஏலாட்டிப் போ போய் உன்ர அறைய துப்பரவாக்கு என்றார் அம்மா. ஜானின்ற அம்மா தான் ஜானின்ற அறையெல்லாம் சரி செய்யிறவ. இங்க நான் தான் செய்யவேண்டியிருக்கு. என மனதிற்குள் நினைத்தபடியே எல்லாவற்றையும் சரி செய்தாள்.
பின் ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினாள்.
நிசா நானும் அப்பாவும் ஒருக்கா உதில கடைக்குப் போட்டு வாறம் வீட்டில கவனமா
இரு என்ன. யாரும் கதவத்தட்டினா திறக்கக் கூடாது என்ன? ஏன் என்னை ஜானி வீட்டில விட்டுட்டுப் போகலாம் தானே. கேட்கப் பயமாக இருந்தது நிசாவிற்கு. பேசாமல் இருந்தாள்.
கதவு சாத்தியது தான் தாமதம் டிவியைப் போட்டுவிட்டு சுதந்திரமாக இருந்து பார்த்தாள். பசித்தது. சாப்பிட ஒனறுமில்லை. நேரம் பன்னிரண்டாகியதால் டீவியையும் விட்டுவிட்டு வந்து படுத்தாள். நன்றாகத் தூங்கிவிட்டாள்.
அவள் தலையை யாரோ வருடுவது தெரிந்தது. அது அப்பாவாத்தான் இருக்கும். மெல்லக் கண்களைத் திறந்தாள். நெற்றியிலே முத்தமிட்டபடி சாப்பிட வாங்கோ என்ர நிசாக்குஞ்சு என்றார். அப்படியே அவர் கழுத்தை இறுகக் கட்டிக்கொண்டாள் நிசா. பின் தன்னிரு கைகளையும் தூக்குமாறு நீட்டினாள். அப்படியே தூக்கிக் கொண்டு போனார் அப்பா. அப்பா நல்லவர். அவருக்கு என்னோட விளையாட எல்லாம் நல்ல விருப்பம். ஆனா அவருக்கு நேரமில்ல. அம்மாக்கென்டா நிறைய நேரமிருக்கு. ஆனா சமயல் எந்த நேரமும் காதுக்க டெலிபோன். இல்லாலாட்டி தன்ற சினேகிதி வீட்ட என்று போயிடுவா. என்னோட மினக்கெட அவவிற்கு எங்கே நேரம். மனதிற்குள் பலவற்றையும் நினைத்துப் பார்த்தபடியே அப்பாவின் தோளிலே சாய்ந்து படுத்தபடி கழுத்தை இறுகக் கட்டிக்கொண்டாள். அப்பாவுடன் சாப்பிடப் போனாள் நிசா. அப்பாவிடம் சாப்பாட்டைக் குழைத்து தீத்தி விடும்படி கேட்டாள். ஓகே ஓகே ஆனா எல்லாத்தையும் சாப்பிட வேணுமாம் என்றபடி அப்பா தலையசைத்தார். நல்லாச் செல்லங் குடுங்கோ. உவளுக்கு எட்டுவயதாகுது இன்னும் தீத்திக் கொண்டிருங்கோ வேற வேலையில்லாம. எதற்கெடுத்தாலும் பொம்பிளப்பிள்ள அவளச் செல்லங் குடுத்துக் கெடுக்காதையுங்கோ எனறுதான் பேசுறா. ஏன் ஜானியும் பொம்பிளப் பிள்ள தானே.
மறுநாள் நிசா அப்பா அம்மாவுடன் அம்மாவின் பிரெனட் வீட்ட சாப்பாட்டிற்குப் போனாள். அங்கே அவள் வயதில் மாலி இருந்தாள். நிசா அவளுடன் விளையாடினாள். தனது காரையும் மாலியின் தம்பி வைத்து விளையாடினான். தானும் அதை எடுத்து விளையாடினாள். மாலியிடம் பல பாபி டோ ல்கள் இருந்தன. நிசா ஒவ்வொன்றையும் ஏக்கத்துடன் எடுத்துப் பார்த்தாள்.
மாலி யார் உங்களுக்கு இதெல்லாம் வாங்கித்தாறது என்றாள் நிசா. அதற்கு மாலியோ என்ற மம்மியும் டடியும் தான். அன்று என் அம்மா மாலியையும் அவள் தம்பியையும் எத்தனை தரம் மாறி மாறித் தூக்கியிருப்பா. நான் கேட்டா.. ம்.. எதற்கு இதெல்லாம் விட்டு விடுவோம்.
வீட்டிற்கு வரும்போதோ நிசாவின் மனம் மிகவும் பாதிப்படைந்திருந்தது. காரணம் அவள் போன வீட்டில் தாராளமாக நிறைய விளையாட்டுச் சாமான்கள் கிடக்கு அப்படியிருந்தும் தன்ற அம்மா தனது காரையும் அவர்களுக்கே கொடுத்துவிட்டாளே என்ற ஆதங்கம் தான். பாவம் அந்தப் பிஞ்சு மனம் எதற்காக ஏங்கித் தவிக்க வேண்டும்?
இதற்கு யார் காரணம்?
முற்றும்.