Design & Development
Graphic Designing | Web Development
‘எழில்நிலா’ இணையத்தளத்திலிருந்து சேமிக்கப்பட்ட சில ஆக்கங்கள்
Some articles archived from ‘ezilnila.ca’

சிறுகதைகள்

எழுதியவர்: நளினி மகேந்திரன்

சுயரூபம்

இன்று மாலதிக்கு விடுமுறை. இன்றாவது சிறிது நேரம் படுத்திருக்கலாம் என்று எண்ணிக்கொண்டுதான் இரவு படுத்தவள். ஆனால் அதிகாலை மூன்று மணிக்கே டெலிபோன் வந்து அவளை எழுப்பிவிட்டிருந்தது. அதன்பின் அவளால் தூங்கவே முடியவில்லை. மனம் இருப்புக்கொள்ளவில்லை. பலமான காற்று வீசும்போது எல்லாமே பறப்பதுபோல நில்லாமல் நீந்திவரும் நினைவலைகளென பலவகையான எண்ணங்கள் அவள் மனத்திரையிலே வந்து வந்து அலைமோதிக்கொண்டிருந்தன. படுக்கையிலே புரண்டு புரண்டு படுத்தாள்.
ஆறு பிள்ளைகளைப் பெற்றும் அம்மாவின் நிலைமை இப்படியிருக்கிறதே. பாவம் அம்மா. அண்ணி அக்கா இவர்கள் வேலைக்குப் போகாததால் அம்மாவிற்கு ஸ்பொன்ஸர் செய்ய இயலாதாம் என்றார்கள். சரி கொஞ்சக் காசாவது தாருங்கோவன் என்றதற்கு எவ்வளவு கதையளந்தார்கள். ஓருநாள் அண்ணி கூறிய அந்த வார்த்தைகள் இப்போதுங்கூட அவள் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. ‘உந்தக்கிழடுகள இங்க கூப்பிட்டுப்போட்டு இந்தக் குளிருக்கு அதுகள் செத்துக்கித்துப் போனால் அது வேற செலவு. என்றார். இப்படி எத்தனை கதைகள். எல்லாம் கேட்டுக்கேட்டு அலுத்துப் போயிருந்தாள் மாலதி அவள் கணவர் அவர்களை நன்கு விளங்கி வைத்திருந்தார். இங்கே மாலதி கேட்டீரே உம்முடைய சகோதரங்களில எனக்கெண்டா எள்ளளவும் நம்பிக்கையில்லை. உமக்கு இஸ்டமெண்டாச் சொல்லும் நாங்களே அம்மாவைக் கூப்பிடுவம். இந்த வயது போன நேரத்தில அங்க தனியக் கிடந்து என்ன கஷ்டப் படுறாவோ தெரியாது. பெற்றதுகளின்ர மனம் நோகப் பண்ணக் கூடாது. காசு இன்றைக்கு வரும் நாளைக்குப் போகும் காசை நாங்கள் எப்படியும் உழைச்சுப்போட்டுப் போகலாம் ஆனால் இத்தனை பிள்ளைகளைப் பெற்றும் அங்க கிடந்து கஸ்டப்பட வேணும் என்று இருக்கே… என்ன நினைக்கிறீர் சொல்லுமன் என்றான் சாந்தன் மிகவும் அமைதியாகவும் ஆணித்தரமாகவும். அதன் பின்பூபதிஅம்மாவின் அலுவல்கள் மிக விரைவிலேயே நிறைவேறி விட்டன.

பூபதி அம்மா வந்து சேர்ந்த பின் தான் எல்லோரும் அவர் மீது அன்பு மழை பொழியத் தொடங்கினர். டெலிபோனில் மணித்தியாளக் கணக்காகக் கதையளந்தார்கள். சோழியன் குடுமி சும்மாவே ஆடும். அண்ணாவும் அண்ணியும் அம்மாவைக் கோயில் குளம் என்றெல்லாம் அழைத்துப் போனார்கள். மாலதிக்கோ வேலைக்குத் தான் போனபின் பாவம் அம்மா தனிய இருக்கிறாவே என்ற கவலை. சாந்தனும் அம்மாவ சும்மா கட்டுப்படுத்தாதையும். அவ விரும்பின இடத்தை போய்வரட்டும் வீட்டுக்குள்ள அடைபட்டு எத்தனை நாளைக்குத்தான் இப்படி இருக்க முடியும். ஏன் நீர் வந்த புதிதில் பட்ட பாடுகள மறந்து போனீரே? என்றான். அம்மாவும் சனி ஞாயிறு தினங்களில் தான் மாலதியுடன் இருக்கத் தொடங்கினார்.
ஓரு நாள் பசுபதிஅம்மா மாலதியிடம் மெல்லக் கதைகளை அவிட்டு விட்டார். பிள்ளை மாலதி நான் ஒருக்கா உன்னோட கதைக்க வேணும் என்றார். மாலதியும் என்னம்மா என்றபடி கதைகளைக் கவனமாகக் கேட்டாள். உவன் கொண்ண சொல்லுறான் ஏன் சும்மா இருந்துகொண்டு இருக்கிறியள்.. வெல்பெயர் அடித்தால் காசு வருந்தானே அதில என்ற சிலவுகளைப் பார்க்கலாம் தானே. அதுக்கு உன்ற சைன் ஏதோ தேவையாம். நீ சம்மதித்தால்.. தான் உன்னோட கதைக்கிறன் என்றிருக்கிறான். ஏன் சும்மா வாற காசை விடுவான் என்று நினைக்கிறன் என்று அடுக்கிக்கொண்டே போன அம்மாவின் கதைகளை அவளால் தொடர்ந்து கேட்க முடியாமலிருந்தது. அவளை யாரோ சம்மட்டியால் அடிப்பது போலிருந்தது. பாவம் அம்மா அவவிற்கு இங்குள்ள சட்டதிட்டங்கள் எங்கே புரியப் போகின்றது. ஒருவாறு தன்னைச் சுதாகரித்தவள் அம்மா உங்களுக்கு என்ற நிலமை விளங்கயில்ல எண்டு நினைக்கிறன். சாந்தன் தன்ற அம்மா அப்பாவிற்கு ஸ்பொன்சர் செய்திருக்கிறார். இப்போ நீங்கள் வெல்பெயர் அடித்தால் எல்லாமே குழம்பிவிடும். பாவம் அவர்கள். அம்மா நீங்கள் கூடுதலான நாட்கள் அவர்களோட தானே இருக்கிறீங்கள். நீங்கள் வந்தாப்பிறகுதான் அவையளும் வேலைக்குப் போகத் தொடங்கியிருக்கினம்.. அவையின்ர ஐந்து பிள்ளைகளையும் பார்த்து சமையல் வேறு செய்யிறீங்கள். அவை உங்களால மாதம் எவ்வளவு மிச்சம் பிடிக்கினம். நான் என்ர பிள்ளைகளை டேக்கெயருக்கு விட்டு வேலையால வந்து சகல வேலைகளும் செய்யுறன். நான் எப்பவாவது அலுத்ததுண்டா? உங்கள வைத்துப் பார்க்க முடியாது என்று சொன்னனானே? ஆனால் அவர்கள் உங்கள வைத்துப் பார்க்கயில்ல. நீங்கள் அவர்களுக்கு வேலைக்காரியாகத் தொண்டு செய்யிறீங்கள். நீங்கள் நிம்மதியா இருக்கோணும் என்றுதான் நான் வாயை மூடிக்கொண்டிருக்கிறன். நீங்கள் கஸ்டப்படுறதிற்கே நான் உங்கள இங்க கூப்பிட்டன். உங்கள் கடமைகள் முடிந்திட்டுது. இனி நீங்கள் ஓய்வு எடுக்க வேணும் என்றுதான் உங்கள இங்க கூப்பிட்டன். ஏன் நான் நீங்கள் வந்ததும் டேக்கெயரை நிற்பாட்டியிருக்கலாமே. ஏன் செய்யேல்ல என்றாவது தெரியுமே. நான் ஒன்று நினைக்க ஏதோ எல்லாமே தலைகீழா நடக்குது. எதற்காக வெல்பெயர் அடிக்கினம் உங்களிடமிருந்து வாடகைக் காசும் சாப்பாட்டுக் காசும் வாங்க. நீங்களும் எங்களிட்டயிருந்து பணம் வாங்கித்தானே எங்கள வளர்த்தனீங்கள்? நீங்கள் எங்களைப் பெற்று வளர்த்ததற்கு நன்றிக் கடன்தான் இதெல்லாம். நீங்கள் இனிமேல் அங்க போகத் தேவையில்லை இங்கு ராசாத்தி போல இருக்கலாம். நீங்களே யோசித்து முடிவெடுங்கோ என்று படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டு தன் அலுவல்களைக் கவனிக்கச் சென்றுவிட்டாள்.

டெலிபோன் மணி ஒலித்தது. அறைக்குள்ளிருந்து மாலதி போனை எடுத்தாள். அதே நேரம் அம்மாவும் எடுத்துவிட்டார். அம்மா முந்திக்கொண்டதால் மாலதி மெளனியானாள். போனை வைக்கப் போனவளின் காதுகளில் அண்ணாவின் கதையில் தன் பெயர் அடிபடவே கதையைத் தொடர்ந்து கேட்டாள். அம்மா உவள் மாலதி என்னவாம். சம்மதித்தவளோ? என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனான் அண்ணா. அம்மாவிடமிருந்து ஒரு பெருமூச்சே பதிலாக வந்தது. உவள் ஏதோ சொல்லி மனத மாற்றிப் போட்டாள் போல கிடக்கு. அவளுக்கு இப்ப வாய் கூட. தான் மட்டுந்தான் பிள்ளை என்ற நினைப்புப் போல. தன்ற தாய் தகப்பனைக் கூப்பிட்டாப்பிறகு எல்லாருக்குமாச் சேர்த்து வெல்பெயர் அடிக்கிற யோசின போல சாந்தனுக்கு. என்னம்மா ஏதாவது சொல்லுங்கோவன். நான் இப்ப வாறன் வெளிக்கிட்டு நில்லுங்கோ என்ன. என்றுவிட்டு போனை வைத்துவிட்டான். மாலதிக்குத் தன் கணவரைக் குறை கூறியது எள்ளளவும் பிடிக்கவில்லை. அவள் கண்களைத் துடைத்தபடி போனை வைத்தாள். என் கணவர் எப்போதாவது என் அம்மாவை வேறு யாரோ என நினைத்ததுண்டா? நான் அம்மாவின் கடமைகளை மறந்தாலும் கூட அவர் தானே என்னைத் தூண்டுவார். அப்படியானவரை எப்படி ? எப்படி?. வாய் கூசாமல் இப்படிக் குறை கூறுகினம். கடவுளே இவை இவருடைய காதுகளில் விழுந்தால் எங்கள் குடும்பம் பற்றி எவ்வளவு கீழ்த்தரமாக நினைப்பார். அப்படியே கட்டிலிலே அமர்ந்துவிட்டாள். அவள் பொங்கிவரும் கண்ணீரை இமைகளால் மூடினாள்.

பசுபதி அம்மாவும் வீட்டை விட்டுப்போய் வாரங்கள் இரண்டு உருண்டோ டிவிட்டன. எந்தவிதமான பதிலுமில்லாமல் மெளனமாக எப்படி அம்மாவால் இருக்கமுடிகின்றது. எப்படியும் உணரத்தான் போகின்றா அப்போ அம்மாவிற்கு விளங்கும் என்று விட்டு விட்டாள் மாலதி. பின் ஒரு நாள் பசுபதிஅம்மா திடீரென்று எதிர்பார்க்காத நேரத்தில் வந்து மளமளவென்று தன் அறைக்குள் சென்று தன் பெட்டிகளை எடுத்தார். அப்போ மாலதி தன் பிள்ளைகளை முதலில் அனுப்பினாள். பின் தேநீர் ஊற்றிக்கொண்டு அறைக்குள் போனாள். அம்மா எப்படி இருக்கிறீர்கள்? இதயத்திலிருந்து வார்த்தைகள் வர மறுத்தன. அவள் உதடுகள் வெறும் வார்த்தைகளை உதிர்த்தன. இது என்ன எல்லாவற்றையும் எடுக்கிறீர்கள் என்ன நடந்தது? ஏன்? என்று தடுமாறியபடி கேட்டாள். அம்மா மெளனமாகத் தன் அலுவல்களைக் கவனித்தார். பிள்ளைகள் தங்கள் பாட்டிற்குப் போய்விட்டார்கள். மாலதியால் எதுவுமே கதைக்கமுடியாமல் துக்கம் தொண்டையை அடைத்தது. அம்மா இப்படி நீங்கள் கதைக்காமல் போனால் எப்படி? நான் உங்களுக்கு என்ன பிழை செய்தேன்? ஏன் இப்படி நடக்கிறீங்கள்? என்று பொங்கி வரும் அழுகையை அடக்கியவளாகக் கேட்டாள். ம்…என்று பெருமூச்சொன்றை விட்டவராக அப்படியே கட்டிலில் தொப்பென்று இருந்தார். நான் இனி அங்கதான் இருக்கப் போறன். வேணுமென்டா நீ அங்க வந்து பார்க்கலாந்தானே. அதுகள் பிள்ளையளோட எவ்வளவு கஸ்டப்படுகுதுகள். சாப்பாட்டுக்குக் கூட சில நேரம் காசு தட்டுப்பாடு வருகுது. என்று மிகவும் கவலையுடன் சொன்னார். மாலதிக்குச் சிரிப்பாக வந்தது. அண்ணா சீட்டுக்கட்டுபவரை எனக்குத் தெரியும். மாதாமாதம் அவ்வளவு தொகை மிச்சம் பிடிக்கப் போனால் இதுதானே நடக்கும். அம்மாவிற்கு விசயம் தெரியாது போல. மற்றது அண்ணா வாங்கவுள்ள வீடு பற்றியெல்லாம் அவவிற்குத் தெரியாது போல யாரும் எப்படியும் சந்தோசமாக இருக்கட்டும். அது அவரவர் செய்த பலன். நான் அவர்களிற்கு என்ன துரோகம் செய்தேன். ஏன் என்னிடமிருந்து அம்மாவைப் பிரிக்கிறார்கள்? பலவற்றையும் நினைத்துக் குழம்பினாள் மாலதி. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தவளாக அம்மா நான் வேலைக்குப் போனாப்பிறகு நீங்கள் வீட்டில தனிய என்றும் உங்களுக்கும் மாற்றங்கள் இருந்தால் மனதுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்குமென்றுதான் உங்கள அங்க போய்வரக் கூடுதலாக விட்டனான். உங்கள வைத்துப் பார்க்க ஏலாது என்றுமட்டும் நினைக்காதையுங்கோ. இவ்வளவு நாளும் டேக்கெயருக்கு வீண் காசு என்று சொல்லி வீட்டில இருந்தவர்கள் எல்லாம் ஏன் இப்ப போகினம். எனக்கு மற்றவர்களின் கதை தேவையில்லை. ஆனால் அம்மா நீங்கள் என்னைப் புரிந்துகொண்டால் சரி. உங்களக் கூப்பிடுறத்திற்கு நாங்கள் எவ்வளவு அக்கறை எடுத்தோமோ அதேதான் இப்போ சாந்தனின் அம்மா அப்பாவிற்கும் எடுக்கிறம். உங்களக் கூப்பிடக் காசு இல்லை என்று ஒப்பாரி வைத்தவர்களுக்கு வீடு வாங்கக் காசு எங்கிருந்து வந்தது. சரி நாங்கள் அவர்களின் காசை எதிர்பார்க்கவில்லை. இப்போ அவர்கள் என்ன ஞாயத்துடன் உங்கள அங்கேயே வைத்திருக்க முடியும். அம்மா உங்களிற்கு அங்கிருப்பது நிம்மதி சந்தோக்ஷம் என்றால் தாராளமாக இருங்கோ. நீங்கள் கஷ்டப் படாமல் சந்தோஷமாக இருக்கத்தான் உங்களை இவ்வளவு கஷ்டப் பட்டுத் தனி ஒருத்தியாகக் கூப்பிட்டேன். நீங்கள் எப்போதும் தாராளமாக இங்கு வரலாம். உங்கள் அறை அப்படியே இருக்கும். ஆனால் ஓன்றுமட்டும் உங்களிற்கு நான் செய்யச் சம்மதமில்லை. என்றுவிட்டு பேச்சை அப்படியே நிறுத்தினாள். புருவங்களை உயர்த்தி மாலதியை ஓர் அர்த்தபுஷ்டியுடன் பார்த்தார் பூபதியம்மா. பின் என்ன? என்றார். நான் உங்களிற்கு வெல்பெயரிற்கு மட்டும் சைன் பண்ணி இப்போதைக்குத் தரப் போவதில்லை. என்றாள் அமைதியாக. இப்போதைக்கு என்பதை மட்டும் மிக அழுத்தமாக இறுக்கிச் சொன்னாள்.

அம்மா போன கவலை மாலதியை வாட்டத்தான் செய்தது. எண்ணற்ற துன்ப வேல்கள் அவளுக்குள் பாய்ந்துகொண்டிருந்தன. நெஞ்சப் புண்ணதை ஆற்றிட நினைந்து அவள் தனக்குள்ளாக அழுதாள். அந்தக் கண்ணீர் அவள் காயங்களுக்கு மருந்தாயின. வீட்டிற்கு வருபவர்கள் வேறு ஒரே அம்மா பற்றிய கதையாகவே கதைத்தார்கள். மாலதி அனலிடைப் புழுவெனத் துடித்தாள். என் சகோதரர்கள் தானே ஏன்? ஏன்? இப்படியெல்லாம் மாறினார்கள்? கனடா அவர்களை மாற்றியதா? அல்லது? காசாசை அவர்களை ஆட்கொண்டுவிட்டதா?

நாட்கள் நகர்ந்தன. ஒரு ஞாயிற்றுக் கிழமை அம்மாவின் தொலைபேசி அழைப்பு வந்தது. மாலதி என்ன ஒருக்கா வந்து கூட்டிப்போக முடியுமோ என்றார். சரி எனக்கு மினக்கெட நேரமில்ல கீழ வந்து நில்லுங்கோ என்ன என்றுவிட்டு போனை வைத்தவளிற்கு அம்மாவின் குரலிலே வித்தியாசம் இருப்பதை உணர்ந்தாள். அம்மா பெட்டியும் கையுமாக காரினுள் ஏறினார். மாலதி மெளனமாகக் காரைச் செலுத்திக் கொண்டிருந்தாள். தன் கலங்கிய விழிகளை காட்டாமல் நேரே பார்த்தபடி இருந்தாள். ஆனால் அம்மாவின் இழைத்த உடம்பும் வாடிய முகமும் அவளைச் சிந்திக்க வைத்தன. இருவரிடையேயும் நிலவிய மெளனத்தை அம்மா தான் கலைத்தார். அம்மா அங்கு தான் பட்ட கஷ்டங்கள் சொல்லடிகள் யாவற்றையும் விபரித்துக் கொண்டே வந்தார். மாலதிக்கு இந்த வெல்பெயர்க் கதை ஏதும் வருகிறதா? அதில் அவர்கள் ஏதும் செய்தார்களா? என்பதை அறிவதிலேயே மிகவும் ஆவலாயிருந்தாள். ஆனால் அது பற்றி எதுவிதமான கதைகளும் இல்லாததால் மகிழ்ச்சியுடன் வீடு போய்ச் சேர்ந்தார்கள். அம்மா வருவதை அறிந்த சாந்தன் வீட்டிற்கு வரும்போது 24 மணி நேர வானொலிப் பெட்டியையும் வாங்கி வந்தான். பிள்ளைகள் அம்மம்மா என்று கத்தியபடி ஓடிப்போய் அட்டைபோல் ஒட்டிக்கொண்டார்கள்

நாட்கள் பறந்துகொண்டிருந்தது. இப்போ பூபதிஅம்மாவிற்கு பல சிநேகிதர்கள். தன் இஷ்டம் போல் சுதந்கிரமாக இருக்கின்றா. வாராவாரம் மாலதி கைச் செலவுக்குக் கொடுக்கும் காசுகளைச் சேர்த்து தான் விரும்பியபடி புராணக் கதைப்புத்தகங்கள் வாங்குவது போன்ற செலவுகளைச் செய்கின்றா. நான் என் அம்மாவை இப்படித்தான் வைத்திருக்க வேண்டும் என்று விரும்பினேன். இனி மாமா மாமியாட்களும் வந்தால் அவவிற்கு நன்கு பொழுது போகும்.

பலவற்றையும் நினைத்தபடியே தூங்கிப் போன மாலதியை சாந்தன் மெல்லத் தட்டி எழுப்பினான். என்ன இன்று லீவு என்று தூங்கிவிட்டீராக்கும்; என்ற சாந்தனின் செல்லமான சீண்டலுடன் கண்களை மெதுவாகத் திறந்து நேரத்தைப் பார்த்தாள். மணி எட்டைத்தாண்டியிருந்தது. கட்டிலில் இருந்து எழுந்தவள் சுறுசுறுப்படைந்தாள். வெளியே வந்து பார்தாள் அம்மாவை நடுவே இருத்தி பிள்ளைகள் இருவரும் இருபுறமுமாக அமர்ந்து சில்ரன் புரொகிராம் டீ. வீயில் மிகவும் சந்தோக்ஷமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். 9 எனக்கு இப்போ மூன்று குழந்தைகள் ஆம் என் அம்மா கூட எனக்கு ஒரு குழந்தை போலத்தான். ம்.. அம்மா சந்தோக்ஷமாக இருக்கிறா அது போதும். இனிமேல் என்னென்ன மாற்றங்களோ? என் சகோதரர்கள் இனி எப்போ தங்கள் சுயரூபங்களைக் காட்டத் தொடங்குவார்களோ?.. என்று பெருமூச்சு விட்டபடி தன் அலுவல்களைக் கவனிக்கச் சென்றாள் மாலதி.

முற்றும்.