தற்போதைய இளைய தலைமுறை சமூக வலைதளங்களிலேயே தங்கள் வாழ்க்கையை செலவிட்டுக் கொண்டிருக்கிறது என்று மூத்த தலைமுறை விமர்சனம் செய்கிறது. ஆனால், இதனை இளைய தலைமுறையின் குறைபாடாக மட்டும் சொல்லி கடந்துவிட முடியுமா ? அல்லது சமூக வலைதளங்களின் மீது மொத்த பழியையும் போட்டுவிட்டு நகர்ந்துவிட முடியுமா ?
சமூகத்தின் எந்த ஒரு விளைவும் சமூக காரணிகளிலிருந்தே எழுகிறது. இன்றைய இளம் தலைமுறையின் வாழ்வில் சமூக வலைதளங்கள் கணிசமான பகுதியை ஆக்கிரமித்திருக்கும் விளைவின் சமூக காரணிகளை தேடத்தான் வேண்டும்.
virtual உலகில் என்ன நிகழ்கிறது? நிறைய அளவலாவல்கள், விவாதங்கள், அன்பு, நட்பு, காதல் பகிர்தல்கள் virtual உலகை ஆக்கிரமிக்கிறது. அதாவது நிஜ உலகில் நாம் தொலைக்கும் விஷயங்கள் virtual உலகில் மிக அதிகமாக நிகழ்கிறது. இன்னொரு வார்த்தைகளில் சொலவதானால் கூட்டு குடும்ப வாழ்வை தொலைத்து, whatsapp group ல் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் நாம்.
இந்த வரிகளுக்கிடையில் ஒளிந்திருக்கும் செய்தி இதுதான். நிஜ வாழ்க்கையின் மறுதலிப்புகள்தான் virtual உலகின் பிரதிபலிப்பு. வேக வேகமாக சாப்பிட்டு, வேக வேகமாக தூங்கி, வேக வேகமாக வாழ்ந்து முடிக்கும் நமக்கு மனதின் ஏதோ ஒரு ஓரத்தில் கூட்டு வாழ்க்கைக்கான, உறவுப் பகிர்தலுக்கான ஏக்கமும் ஒளிந்திருக்கிறது. நிஜ வாழ்வில் அதற்கான சூழல் மறுக்கப்படும் நிலையில் virtual உலகில் அது பிரதிபலிக்கிறது.
தற்போதையை நவீன சமூகம் தனது மனிதர்களை கூட்டு குடும்ப, கூட்டு சமூக வாழ்க்கையை தொலைத்து தனித்தனி மனிதர்களாக வாழச் செய்கிறது. ஒரு தனிக் குடுபத்திற்குள்ளும் பெற்றோர்களும், பிள்ளைகளும், சகோதர சகோதரிகளும் தனித்தனி அறைகளில் தனித் தனியாக வாழ்கிறார்கள். கையில் ஸ்மாட் ஃபோனும், whatsappம், facebookம் அவர்கள் உலகமாகிறது.
உறவுகளுடனான அளவலாவலும், பகிர்வும் மறுக்கப்படும் சமூகச் சூழலில், whatsappம் facebookம் அந்த அளவலாவலை பகிர்தலை அளிக்கிறது. கூட்டு சமூக வாழ்க்கை தொலைந்து போன சமூகத்தில் whatsappம் facebookம் அந்த கூட்டு மகிழ்ச்சியை அளிக்கிறது. காதலுக்கான சுதந்திரமான தளம் மறுக்கப்படும் சமூகச் சூழலில், whatsappம் facebookம் அந்த தளத்தை அளிக்கிறது.
சற்று ஆழ்ந்து நோக்கினோமானால், சமூக வலைதளங்கள் இளைய தலைமுறையை இப்படி உருவாக்கவில்லை. நமது சமூகத்திலும் குடும்பத்திலும் ஏற்கனவே இருந்த சிக்கல்தான், இளைய தலைமுறையை சமூக வளைதளங்களிடம் ஒப்படைத்திருக்கிறது.
சமூக வலைதளங்களில் தங்களுக்கான நட்புகளை, தங்களுக்கான வட்டத்தை இளைய தலைமுறை உருவாக்கிக் கொண்டு, அந்த வட்டம் நிஜத்திலும் சொந்த பந்தங்களாக பரிணமிப்பது, கூட்டு சமூக வாழ்க்கை மீது நமக்குள்ள பிடிப்பை வெளிப்படுத்துகிறது.
ஆம், அடிப்படையில் அனைத்து உயிர்களும் கூட்டாக வாழும் பண்பைத்தான் கொண்டுள்ளன. கூட்டு வாழ்க்கையில்தான் மகிழ்ச்சியடைகின்றன. ஆனால், இயற்கைக்கு புறம்பாக நாகரிக மனிதர்களை கூட்டு வாழ்க்கையிலிருந்து அப்புறப்படுத்தி, தனித் தனி தீவுகளாக சிதறடித்திருக்கிறது நவீன சமூகம்.
கூட்டுச் சமூக, கூட்டுக் குடும்ப வாழ்வை தொலைக்கும் நிலைக்கு சமூகம் வரக் காரணம் என்ன?
முற்றிலும் பணமயமாகிப்போன பதற்றமான வாழ்க்கை, ஒவ்வொரு நிமிடமும் இலாபம் சார்ந்து மட்டுமே இயங்க வேண்டும் என்று சமூகத்தை பழக்கப்படுத்தி இருக்கிறது. பொருட்களை நுகர்ந்து, கொண்டாடி மகிழ்வது மட்டுமே வாழ்வின் சாராம்சம் என்ற நிலமையை நுகர்வுக் கலாச்சாரம் ஏற்படுத்தியிருக்கிறது.
பணம், இலாபம், நுகர்வு என்று ஓடும் மனிதர்கள் உறவுகளின் மீதான பற்றை இழக்கிறார்கள். கூட்டு வாழ்க்கையை சுமையாக கருதுகிறார்கள். ஓடி ஓடி பணம் சம்பாதிப்பதில் சற்று நிதானம் ஏற்பட்டாலும் நாம் தோற்றுவிடுவோமோ என்று அஞ்சுகின்றனர்.
ஆகவே ஓடுகின்றனர், குழந்தைகளை ஓட வைக்கின்றனர், முதியோர்களை கழித்துக் கட்டுகின்றனர். வங்கி சேமிப்பை உயர்த்துவதில் மொத்த வாழ்க்கையையும் செலவிட்டு ஜெயித்துவிட்டதாய் கொக்கரிக்கின்றனர்.
அங்கு பாட்டியும் பேத்தியும் அடிபட்ட பட்டாம்பூச்சியை பூக்களில் உட்கார வைக்கும் காட்சியில், நவநாகரிக மனிதர்களைப் பார்த்து இயற்கை எள்ளல் செய்வதை பாவம் இவர்கள் கவனிப்பதில்லை.
– அருண் பகத்
நன்றி: மாற்று