ஓ இன்று கோகிலாவைப் பெண் பார்க்க வருகிறார்கள். அதுதான் கோகிலாவின் அண்ணி சுதா அவளை அலங்காரம் செய்துகொண்டிருந்தாள்.
கோகிலா அண்மையில்தான் கனடா வந்திருந்தாள். அவள் அண்ணன் ராகவனோ தன் தங்கை மீது உயிரையே வைத்திருந்தான். தன் தங்கைக்காக எதையுமே செய்யத் தயாராக இருந்தான். அவன் தனக்குத் தெரிந்த புரோக்கார் மூலமாக தன் ஆருயிர்த் தங்கைக்காக வரன் தேடிக்கொண்டிருந்தான். பெண் பார்க்க வருபவர்களோ மண்பார்த்துத் தலை கவிழ்ந்து சென்றனர். அவர்கள் எதனை எதிர்பார்க்கிறார்கள்? கை நிறையச் சீதனம் கொடுக்க அவள் அண்ணன் தயாராகவேயுள்ளான். அவள் குணத்திற்கு நிகர் அவளே தான். மொத்தத்தில் சொல்லப் போனால் பத்தரை மாற்றுத் தங்கம். இறந்தகாலத்தின் நிராகாரிப்புகளைத் தாங்கி ஏதிர்காலத்தின் நம்பிக்கைகளைச் சுமந்து வாழும் ஓரு நிகழ்காலப் பெண்ணவள்.
கோகிலா பிறந்த போது அன்று அமாவாசை போலும். அதனால் அவள் நிறமும் அப்படியே ஆகிவிட்டாற் போலிருந்தது. கோகிலா உண்மையிலேயே ஓர் கோகிலம் தான். அவள் வாய் திறந்து பாடினால் அனைவரும் அப்படியே மயங்கி தம்மை மறந்து ரசிப்பார்கள். அவளிடம் பல திறமைகள் இயல்பாகவேயிருந்தன. இருந்தும் அவளைத் துணையாகக் கைப்பிடிக்க எந்தவொரு ஆண்மகனும் முன்வரவில்லையே. அவளைப் பெண்பார்த்தவர்கள் எத்தனைபேர். கோகிலாவிற்கு ஏன் இவர்கள் எனக்காக வரன் பார்த்து இவ்வளவு சிரமப் படுகிறார்கள் என்றிருந்தது. இருந்தாலும் நான் இவர்களுக்கு ஓர் சுமையாகி விடக் கூடாதே என்ற நினைப்பின் உந்தலாலேயே இன்றும் இந்த பெண் பார்க்கும் படலத்திற்கு ஒப்புக் கொண்டாள். ஒவ்வொரு முறையும் மாப்பிள்ளை வீட்டார் போனபின் அண்ணாவின் துடிப்பு அவள் மனதைக் கசக்கிப் பிழிவது போலிருக்கும். ஆண்டவன் மேல் கோபம் கோபமாக வரும் ஏன் என்னை இப்படிப் படைத்தாய் எத்தனை தேவையான பிரயோசனமான உயிர்களையெல்லாம் குண்டு உருவிலே வந்து குடித்தாய். நான் ஒருத்தி அங்கிருந்தது உனக்குத் தெரியாமலா போய்விட்டது என்றெல்லாம் மானசீகமாகக் கடவுளிடம் சண்டை செய்வாள். அவள் மனம் பொங்கிக் கொந்தளித்துக் கொண்டிருந்தது.
சுதா ஓரு பொம்மைக்கு அலங்காரம் செய்வது போலக் கோகிலாவை அலங்கரித்துக்கொண்டிருந்தாள். இருவரிடையேயும் மெளனம் நிலவியது. அந்த மெளனத்தைக் கலைத்தான் ராகவன். மாப்பிள்ளை வீட்டார் வந்தாகிவிட்டது என்று ஒருவித படபடப்புடன் வெளியே போனான் அவனைத் தொடர்ந்து சுதாவும் போய்விட்டாள். சிறிது நேரத்தின் பின் பெண்ணை அழைத்து வரும்படி மாப்பிள்ளையின் அம்மா கூறினார்.
இவர்களுக்கு மட்டுமென்ன என்னைப் பிடிக்கவா போகிறது? எல்லோரும் என் தோலின் நிறத்தைத்தானே பார்க்கிறார்கள். ஏன்?.. ஏன்?.. இப்படியான பல சிந்தனைகளுடன் தேநீர்த்தட்டை ஏந்திய வண்ணம் மெல்ல நடந்து வந்தாள். அவள் கைகள் நடுங்கின. அவள் உள் மனமோ என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போகப்போகிறவர்களுக்குத் தானே நான் தேநீர் கொண்டு போகின்றேன் என்று ஓலமிட்டது. வெள்ளைத் தோலிருந்தால் குணம் நடை பார்க்காமல் கட்டத் துடிக்கும் இளைஞர் கூட்டம் மலிந்த இந்தக் கனடாவில் யாருக்கு என்னை ஏற்க மனம் வரும்.
ஒவ்வொருவராக தேநீர்த்தட்டை நீட்டியபடியே போலியாக ஓரு புன்னகையை தன்னைப் பார்த்து சிரித்த அந்த அம்மாளிடம் வீசியபடியே தன் அறைக்குள் விர்ரென்று போய்விட்டாள். தான் நடந்து கொண்டவிதம் சிறிது அநாகரிகமாக அவளுக்குப் பட்டது. இருந்தும் அவளுக்கு அப்படிச் செய்தால்த்தான் அவள் மனம் சிறிது ஆறுதலடையும் போல் பட்டது. அவள் பள்ளித் தோழி நித்யா கூட அவர்களுடன் வந்திருந்தாளே. அவளுடனாவது நான் சிரித்திருக்கலாம் அட அவள்கூட என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பாள். சீ அவளுக்கு என்னை நன்கு தெரியும். ஆனால் இப்போ எட்டு வருடங்களின் பின் இன்று அவளைச் சந்திக்கின்றேன்.
அவள் மனம் எரிமலையாகக் கொதித்துக் கொண்டிருந்தது. அதை அதை மற்றவர்களால் எப்படி எப்படி உணரமுடியும்.
யன்னலினூடே வெளியே பார்த்தாள். வசந்த காலமாதலால் எங்கும் பல வண்ணங்களிலே பூக்கள் பூத்துக் குலுங்கின.
மரங்கள் துளிர்விட்டு எங்கும் பச்சை நிறம் படர்ந்திருந்தது. பறவைகள் கூட எவ்வளவு சந்தோசமாக இந்த
வசந்தத்தை அநுபவிக்கிறன. அவைகளை என்போல் யாரும் ஓதுக்கி விட மாட்டார்களாக இருக்கும் பெருமூச்சொன்றை
விட்டாள். அது அவள் மனத்திலே கொதித்துக் கொண்டிருந்த எரிமலையின் வெளிப்பாடாகவே இருந்தது. அந்த
வெம்மையைத் தணிப்பது போல் யன்னலினூடே மெல்லெனத் தவழ்ந்து வந்த தென்றல் அவள் வதனங்களை மெல்ல வருடி
விளையாடியது. தன்னையே மறந்து சிந்தனையில் மூழ்கிவிட்டாள் கோகிலா.
ஊரிலே அம்மாவும் அப்பாவும் பார்க்காத வரன்களா? நான் ஓரு சங்கீத ஆசிரியை என அறிந்தும் கூட என்னை ஓருவரும் ஏற்க முன்வரவில்லையே. இங்கு கனடாவில் பக்கத்து வீட்டாரையே தெரியாத நிலையில் இருக்கும் போது இதுவெல்லாம் எப்படிச் சாத்தியமாகும்.? அண்ணாவும் அண்ணியும் தங்கள் மாப்பிள்ளை தேடும் படலத்தில் சலிப்பதாகத் தெரியவில்லை. என் பயணத்தைத் தொடர எனக்கு ஒரு துணை தேவை. அதற்கு என்னை ஓருவராலும் ஏற்க முடியாதுள்ளதே. நான் ஓரு கூட்டுப் புழுவாக குறுகித் தவிப்பது யாருக்குப் புரியும்.? நானும் பெண் தானே. எனக்கும் கல்யாண தேசம் போக ஆசை. ஆனால்.. ஆனால்.. என்னை அங்கு அழைத்துச்செல்ல ஒரு மனிதர் அந்தத் துணை எங்கே.? யார் அவர்? என் கனவுப் பயிர்களை நிஜமாக அறுவடை செய்ய யார் வருவார்கள்? கன்ன ஓரத்தில் ஓர் மயிர் நரைகாண ….கண்ட கனவுகள் மெல்ல மெல்லக் கரைந்தோட..மற்றோரை மகிழ்விக்க மாரியாதைப் புன்னகைகள்.
தோளிலே ஒரு கை பட நினைவுகளினின்றும் மீண்டு மெல்லத் திரும்பியவள் தன் தோழி நித்யா சிரித்தபடியே தன் கரங்களை அப்படியே இறுகப் பற்றிப் பிடிப்பதை உணர்ந்தாள். கோகிலா நீ எப்படி இருக்கிறாய்? எத்தனை வருடங்களின் பின் உன்னைப் பார்க்கிறன் தெரியுமா? உனக்கு உந்த டிரஸ் நல்ல வடிவாயிருக்கு கொஞ்சம் மெலிந்த மாதிரிக்கூட இருக்கு. அதற்கு மேல் அவர்களுக்கு வார்த்தைகள் வர மறுத்தன. இருவரும் தம் கரங்களை இறுகப் பற்றிப் பிடித்தபடி ஒருவரை ஒருவர் பார்த்தபடி சிலையாக நின்றனர். வாசலிலே காலரவம் கேட்டு இருவரும் திரும்பிப் பார்த்தனர். அங்கே சிரித்தபடியே ராகவனும் அவனருகில் நித்தியாவின் அண்ணா முகுந்தனும் நின்றிருந்தனர். இனி உன் சம்மதத்தில் தான் எல்லாமே இருக்கு என்றபடி கண்களைச் சிமிட்டிய படியே அறையை விட்டு மெல்ல நழுவினாள் நித்யா.
முகுந்தனும் கோகிலாவும் தனிமையில் விடப்பட்டனர். கோகிலாவால் நம்பவே முடியாமலிருந்தது. இப்படியும் ஒருத்தரா? அதுவும் இந்தக் கனடாவிலா? அதுவும் என்னைப் பார்த்த பின்புமா? நித்யா தன் அண்ணா பற்றிச் சொல்லியிருக்கிறாள் தான்.. ஆனால் இன்றுதான் அவரை நேரிலே பார்க்கிறாள். என்ன யோசிக்கிறியள்? என்னை உங்களுக்குப் பிடித்திருக்கா? கோகிலா.. உம்மைப்பற்றி எல்லாமே எனக்குத் தெரியும். இந்தக் கனடாவில நான் பல பெண்களைப் பார்த்தேன். ஆனால் நான் தேடுகின்ற ஏதோ ஒன்று அவர்களிடம் இருப்பதாக எனக்குப் படவில்லை. ஆனால் நான் எதிர்பார்க்கின்ற எல்லாமே ஒன்றாக உம்மிடம் இருக்கிறதாக உணர்ந்தேன். நித்யா உம்மைப் பற்றி எல்லாமே சொல்லியிருக்கிறாள். என்று சொல்லிக்கொண்டேயிருந்தான் முகுந்தன். அவள் நெஞ்சு படபடத்தது. அவனது ஓவ்வொரு வார்த்தைகளும் அவளை ஊடுருவித் தன் உயிரில் கலப்பதாக உணர்ந்தாள். அவனது ஒவ்வொரு வார்த்தைகளும் அவளுக்கு இதமாகவும் நம்பிக்கையூட்டுவதாகவும் இருந்தது. அவள் இருதயம் பலமாக அடித்தது. அந்த ஓசை அவனுக்குக் கேட்டுவிடுமோவென அஞ்சினாள். அவள் கைகள் வியர்த்தன. என்ன நான் கதைத்துக் கொண்டேயிருக்கிறன் நீங்கள் பேசாமலேயிருக்கிறியள் என்றான். அவள் அவன் கண்களை நிமிர்ந்து அப்போ தான் முதல் தடவையாகப் பார்த்தாள். அந்தக் கண்களிலே பொய்யில்லை. அந்தக் காந்தக் கண்களின் கவர்ச்சியிலே அப்படியே அவள் ஈர்க்கப் பட்டுவிட்டாள். அவள் நெஞ்சிலே பொங்கிநின்ற எரிமலை கூட அவன் பார்வையின் குளிர்ச்சி கண்டு தணிந்து போயிற்று.
முற்றும்.