அந்த மரண வீட்டிலே பெரும் பாலானோர் அப்பிணம் வைத்திருக்கும் இடத்தருகே போய் சிறிது நேரம் நின்று
அப்பிணத்தை ஒரு முறை உற்றுப் பார்த்து விட்டு வந்து இருக்கைகளில் அமர்ந்தனர். அவ்வாறு வருபவர்களை
அழைத்து வருபவர்கள் அக்குடும்பத்தில் அப்பிணத்திற்குச் சொந்தக் காரர் என்று சொல்லவும் வேண்டுமா?
தங்களுக்கு மிகவும் நெருங்கியவர்கள் வரும் போது அவர்களை அணைத்தபடி சிறிது நேரம் நின்றார்கள், சில
வேளைகளில் ஏதேதோ சொல்லிப் புலம்பினார்கள். அப்பிணத்திற்கு அருகில் ஒரு கதிரையில் அவரின் மனைவி பாக்கியம்
அமர்ந்திருந்தார்.
விடியற் காலைப் படுக்கையைப் போல அவரின் நெற்றியில் தான் எத்தனை சுருக்கங்கள். நரைத்த அவர் கூந்தல்
அலங்கோலமாக குழம்பியிருந்தது. பாவம் எலும்புந் தோலுமான அவ்வுருவத்தின் குழி விழுந்த கண்களில் இருந்து
கண்ணீர் வழிந்த படியே இருந்தது. அந்தக் கண்கள் மட்டும் அப்பிணத்தையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தன.
பலர் அவரை வந்து கட்டியணைத்து அழுதனர். அது அவருக்கு அசெளகரியமாக இருந்தது. இவர்கள் எல்லாம் யார்? எங்கிருந்து வருகின்றார்கள்? ஏன் என்னைக் கட்டிப் பிடித்து அழுகின்றார்கள். ஒன்றுமே புரியவில்லை பாக்கியத்திற்கு. அவர் மெளனமாக அப்பிணத்திலேயே தன் கவனத்தைச் செலுத்தினார். அவர் சம்பிரதாயங்கள் தெரியாதவர் அல்ல. இத்தனை முகங்களை இப்போதானே பார்க்கின்றார். இவ்வளவு ஆட்கள் இருந்துமா நாங்கள் இவ்வளவு கஸ்டங்களையும் அனுபவித்தோம் என்ற ஆதங்கமாகக் கூட அது இருக்கலாம்.
இவற்றையெல்லாம் இன்னும் ஒரு சோடிக் கண்கள் பின் இருக்கையில் இருந்து அவதானித்துக் கொண்டிருந்தன. அது
அப்பிணமாகக் கிடக்கும் கந்தசாமியின் தம்பியின் மகன் தியாகு.
அவரின் துயரங்களைக் கண்டும் கேட்டும் மனம் வருந்திய ஒரே ஜீவன். தியாகு அங்கு நடைபெறும் ஒவ்வொரு
அசைவுகளையும் மிகவும் உன்னிப்பாக அவதானித்தான்.
ஓ! அதோ அதுதான் பெரிய மகனின் மனைவி தன்னோடு வேலை பார்க்கும் சிலரை அழைத்துப் போகின்றாள். அப்பிணத்தின்
முன்னின்று தன் கண்களைக் கசக்குகின்றாள். அருகில் நின்ற ஒரு பெண் அவரைக் கட்டியணைத்து முதுகிலே தட்டி
ஏதோ சொல்கிறார்கள்.
மரணத்தின் பொருள் கூறுகிறார்களாக்கும். அப்படி ஒன்று இருப்பதை அதனால் ஏற்படப் போகும் இழப்புகள்,
மீண்டும் திரும்பிக்கிடைக்காத அந்த பாக்கியத்தை யார் நினைவிலே கொள்கிறார்கள். இறந்த பின் தான்
அநேகமானோர் சொல்லுவார்கள். .. அட இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால்….. நான் அப்படிச்
செய்திருப்பேனே. இப்படிச் செய்திருப்பேனே….. இப்படி நடக்குமென்று தெரியாமல் போச்சுதே என்று சொல்லிச்
சொல்லிச் சொல்லிப் புலம்புவார்கள்.
ஏன் அவர்களுக்குத் தெரியாதா பிறந்த அந்த நிமிடத்திலிருந்து அந்த ஜீவனுடன் இறப்பு என்ற ஒன்று
காத்திருப்புகளுடன் தொடருகின்றது என்று. யாரும் உயிருடன் இருக்கும் போதே அவர்களுக்குத் தேவையானவைகளைச்
செய்ய வேண்டும் பின் காலம் கடந்து வருந்துவதில் பயனில்லை. உயிருடன் இருக்கும் போது அவர்களுக்கு
மனச்சாந்தி செய்யாதவர்கள் அவர்கள் இறந்த பின் அவர்களுக்குச் சாந்தி செய்கிறார்கள். ஊராருக்கெல்லாம்
காசைக்கொட்டி மண்டபம் எடுத்துத் திவஷம் செய்கிறார்கள். இதெல்லாம் தேவை தானா? தன் தாய் தந்தையருக்கு
கடைசிக்காலத்தில் சேவை செய்யக் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்ற உண்மையை யார் தான் மிக ஆழமாகச்
சிந்திக்கிறார்கள். பிள்ளைகள் நினைத்தாலும் அவர்கள் வாழ்க்கைச் சூழல் கூட அவர்களைக் கையாலாகாதவர்களாக
மாற்றி விடுகிறதே. இதை விதி என்பதா? சதி என்பதா? மதி கெட்டதனால் உண்டான நிலை என்பதா?
தியாகுவின் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. கந்தசாமி – பாக்கியம் தம்பதியரின் வாழ்க்கை அவன் முன் படம் போலக் காட்சியளித்தது.
கந்தசாமி ஊரிலே வீடு வீடாகச் சென்று விறகு கொத்துவார். மற்றும் வேலைகளும் செய்து கொடுப்பார். அவா¢டம் இரண்டு காளை பூட்டிய மாட்டு வண்டி இருந்ததனால் அவ்வூராருக்காக மிகவும் உழைத்தார் என்றுதான் சொல்ல வேண்டும். கந்தசாமிக்கு படிப்பு என்பது சுத்த சூனியமாகையால் இப்படியான நிலைமை. இருந்தும் அவரின் நேர்மையும் திடகாத்தரமான உடலும் அவஇன் அயராத உழைப்பும் அவரை அவ்வூரிலே தலை நிமிர்ந்து வாழ வழி செய்தது.
அவரிற்கு நான்கு ஆண்பிள்ளைகள். அவரின் மனைவி பாக்கியம் அடிக்கடி தன் பிள்ளைகளிடம் “உங்கட அப்பாட ஆசை என்ன தெரியுமோ? உங்களை எல்லாம் நன்றாகப் படிக்க வைத்து பரிய உத்தியோகம் பார்க்கப் பண்ண வேண்டும் என்பதுதான்.” அவர் அடிக்கடி தன் பிள்ளைகளிற்கு நற் போதனைகளை எல்லாம் சொல்லிச்சொல்லி வளர்த்தார். அதே போல் பிள்ளைகளும் நல்லவர்களாகத்தான் வளர்ந்தார்கள். இதற்கிடையில் நாட்டுப்பிரச்சினைகளும் ஆட்கொள்ள ஆரம்பித்ததினால் சொத்துக்களை விற்று பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பினார்கள்.
வெளிநாடு வந்தவர்கள் தங்கள் இஷ்டம் போலத் திருமணமும் செய்தார்கள். கந்தசாமியும் பாக்கியமும் நாட்டு
நிலைமையால் மிகவும் பாதிக்கப் பட்டார்கள். இவற்றையெல்லாம் நேரிலே பார்த்து வந்த தியாகு அவர்களை உடனடியாக
வெளிநாட்டிற்கு அழைக்கும்படி வற்புறுத்தினான். மூத்தமகனின் மனைவி பல சட்டதிட்டங்களை வகுத்தாள். தன்
பிள்ளைகளை தன் தாயார் மிகக் கவனமாகப் பார்ப்பார் என மகன் மனக் கணக்குப் போட்டான். ஈற்றிலே ஸ்பொன்சர்
செய்து அவர்களை அழைத்தார்கள்.
வாரங்கள் நான்கிலும் ஒவ்வொரு பிள்ளை வீட்டிலே தங்கினார்கள். அவர்களின் சிநேகிதர், தங்கள் கிராமத்தவர் என
பலரும் வந்து போயினர். மிகவும் சந்தோஷமாயிருந்தார்கள். இடங்கள் பார்க்கக் கூட்டிப்போனார்கள். கோயில்
குளம் எல்லாமே நல்லாயிருக்கு. பிள்ளைகளின் வீடுகளிலும் நல்ல திறமான சாமான்கள் எல்லாம் வேண்டிப்
போட்டிருக்கினம். சொந்தமா வேற வீடு ,கார் எல்லாம் இருக்கு. “என்ர பிள்ளையள் எல்லாம் நல்லாயிருக்கினம்.”
இப்படி அவர் என்னிடம் வாய் விட்டு மனம் திறந்து சொல்லியிருக்கிறார்.
ஒருநாள் மூத்த மகனின் மனைவி இவையள் ரெண்டு பேரையும் ஒரேயாள் வைச்சுப் பார்க்கிறதெண்டா நிறைய செலவு
வருகுது. ஒராள் எங்கட வீட்ட கொஞ்ச நாளைக்கும் மற்றாள் மற்ற வீட்ட கொஞ்ச நாளைக்கும் இருக்கட்டும். பிறகு
மற்ற ரெண்டு வீட்டையும் போகட்டும். இப்பிடி மாறி மாறி நிண்டா செலவும் குறையும். வைச்சுப் பாக்கிற
சனத்திற்கு அலுப்பும் இல்ல. நான் சாத்திரம் கேட்டனான். உங்கட அப்பா படுத்த படுக்கையில கிடந்து தானாம்
சாவார். கேட்ட நேரம் தொட்டு எனக்கு ஒரே டென்சனாயிருக்கு. எல்லாரும் இவையள எங்கட தலைல கட்டிப்போட்டு
எல்லாரும் சுகமாக இருக்கினம். என்னால இவையளின்ற ஆக்கினை தாங்கேலாது. உங்களால கதைக்கேலாட்டி சொல்லுங்கோ
நான் அவையளோட கதைக்கிறன்.” என்றாள் ராதா. “வருத்தம் வாறது சகஐம் தானே. வயது போன நேரத்தில இப்படி
நடக்கிறது தானே. அதுக்காகப் பயப்பிடுறதே. அவையள் யார் தெரியுமே என்னோடைஅம்மாவும் அப்பாவும்.” என்றான்
சங்கர். “நீங்கள் எல்லாருக்கும் பாவாம் பாருங்கோ ஆனால் அவையெல்லாம் சொகுசா இருந்துகொண்டு சும்மா
விசிட்டர்ஸ் மாதிரிவந்து உங்கட அம்மா அப்பாவில அன்பு பொழிஞ்சு போட்டுப் போகினம். நான் அவையின்ற
நன்மைக்காக என்ன செய்தாலும் அதில குற்றம் பிடிக்கினம். அவையளுக்கு ஒரு வழி பண்ணாட்டி நான் என்ற அம்மா
அப்பாவோட போய் இருக்கப் போறன்.”
இவற்றையெல்லாம் கேட்டதும் கந்தசாமியும் , பாக்கியமும் அதிர்ந்தே விட்டனர். பின் ஒருநாள் எல்லோரும் ஒன்று
கூடி தீர்மானம் எடுத்தனர்.
முடிவு கந்தசாமியும் பாக்கியமும் பிரிக்கப்பட்டனர். இதனால் இருவரும் மனமுடைந்து போனார்கள். வருத்தங்களும்
வரத்தொடங்கி விட்டன. இது இன்னும் சிக்கல்களை அவர்களுக்கு ஏற்படுத்தியது.
ஒருமுறை கந்தசாமி மிகவும் கடுமையான வருத்தத்தில் இருந்தார். அப்போ பாக்கியம் அவரைப் பார்க்காமல் பட்ட
வேதனை இருக்கே அது சொல்லில் அடங்காது. இறுதியாக ஒருநாள் தன் மகனிடம் மனம் திறந்து பேசினார். “பழையவைகளை
மறக்கக் கூடாது. நீங்கள் இப்படி இருப்பதற்குக் காரணமே உங்கள் அப்பா பட்ட கஸ்டங்கள் தான்டா. தம்பி
என்னைக் கடைசிக் காலத்தில அவருக்குத் தொண்டு செய்ய விடாமப் பண்ணி அந்தப் பாவத்தை நீ சுமந்து கொள்ளாத. நீ
என் பிள்ளை அதால உனக்கு இது விளங்கும்.”
பின் கடைசி மகன் ராஹவன் தன் தாய் தந்தையரை ஒன்றாக ஒரேயிடத்தில் வைத்துப் பார்ப்பது எனவும் எல்லோரும் பணம் தருவதாகவும் ஒப்புக்கொண்டார்கள். இருந்தும் என்ன பலன். அவர்கள் மனத்துயரம் தீர்ந்த பாடில்லை. கடைசி மருமகள் சுபா நல்லவள் தான். இருந்தும் தன் பிள்ளைகள் விடயத்தில் மிகவும் சுயநலவாதியாகவே இருந்தாள். ஆசையாக பேரப்பிள்ளைகளைத் தூக்கிக் கொஞ்சி விளையாட வழியில்லை. இவர்கள் இருந்த நிலக்கீழ் அறையோ சரியான குளிராக இருந்தது. எத்தன உடுப்புப் போட்டாலும் தாக்குப் பிடிக்க முடியாமல் இருந்தது. ஒரு கிழமையில் ஒருமுறை கீழே வந்து தன் அம்மா அப்பாவின் உடைகளை சலவை செய்து கொடுப்பான் இளையவன். அப்போது கேட்பான் “ஏன் இவ்வளவு உடுப்பு? வீட்டிலதானே இருக்கிறியள்”. அவனுடைய அந்த வார்த்தைகள் அவர்களைமிகவும் துன்பப்படுத்தியது.
பாக்கியத்தால் மேலும் கீழும் ஏறி இறங்க முடியாமல் இருந்தது. இருவரும் மெல்ல மெல்லமாக பிடித்துப்பிடித்து மேலே வந்து ஆறிய தேநீரைச் சூடாக்கிக் குடித்து விட்டு பாணையும் சாப்பிடுவார்கள். “என்னப்பா. இப்பிடிய இதில கொஞ்ச நேரம் இருந்தால் மத்தியானச் சாப்பாட்டையும் சூடாக்கிச் சாப்பிட்டுப் போகலாம் எல்லே. நாளைக்கு மேல வரேக்க உந்த ரேடியோவையும் மறக்காமக் கொண்டுவந்தா கேட்டுக் கொண்டிருக்கலாம்.” இப்படி எத்தனை நாட்கள் அவர்களின் வாழ்க்கை. மருமகள் வேலையால் வந்து எல்லா இடங்களையும் சுத்தப்படுத்தி பிள்ளைகளையும் பார்த்து, சமைத்து… அவளும் பாவம் அவள் உடலாலும் உள்ளத்தாலும் சோர்ந்து போயிருந்தாள். இதனால் கணவன் மனைவியிடம் வாக்குவாதங்கள் வந்தன. பாவம் அவள் என அவளுக்காக இரங்கிய நாட்கள் எத்தனை.
இத்தனைக்கும் தியாகுவிடமிருந்து அவர்களுக்குக் கிடைக்கும் ஆறுதலான வார்த்தைகள் தன் சொந்தப் பிள்ளைகளிடம் இல்லையே என ஏங்கினார்கள். ஒவ்வொரு பிள்ளைகளிடமும் பட்ட சொல்லடிகளினாலும், செயல்களினாலும் நொந்து போயிருந்தனர். தங்கள் கவலைகளை எல்லாம் தியாகுவிடமே கொட்டித் தீர்த்துக் கொள்வார்கள். கொஞ்சநாட்களுக்கு அவர்களை தன்னுடன் அழைத்துப் போக தியாகு விரும்பினான். பிள்ளைகளிடம் வாதாடி சம்மதமும் பெற்றுவிட்டான். நாளை வருவேன் என்று கூறிச் சென்றான்.
இதையறிந்த பிள்ளைகள் ஒவ்வொருவராக தங்கள் எதிர்ப்பை போனிலே கந்தசாமியிடம் எச்சரிக்கையாகக் கூறினார்கள்.
படுக்கும் போது தன் கடைசி மகன் அவரிடம் வந்து “நீங்கள் போங்கோ ஆனால் எங்கட மானத்தைக் கெடுக்கக் கூடிய
மாதிரி நடக்காதையுங்கோ, என்று பரிய அண்ணி சொன்னவ” என்றான். “அப்ப நீ என்ன சொல்லுற தம்பி” என மீண்டும்
கேட்டார். “நீங்கள் அங்க சந்தோசமாயிருப்பியள் எண்டா போய் வாறதில எனக்கொன்றுமில்லை” என்றான். “அப்ப
நாங்கள் நாளைக்குப் போறம் என்ன.” என்று கூறியவர் மனத்திருப்தியடைந்தவர் போல படுக்கையிலே சாய்ந்தார்.
தொலைபேசி அழைத்தது. பாக்கியம் தான் எடுத்தாள். மறுமுனையில் தியாகு “அப்ப எல்லாம் சரிதானே. நாளைக்கு
வாறியள் என்ன? யாரும் ஏதும் சொன்னவையளோ?”
பாக்கியம் விம்மி விம்மி யாவற்றையும் சொல்லி முடித்தாள். “பெரியம்மா கவலைப் படாதையுங்கோ நாளைக்கு
உங்களுக்கு விடுதலை. பிறகென்ன அடிக்கடி இங்க வர நான் ஏற்பாடு செய்வன். ஒன்றுக்கும் யோசியாதையுங்கோ
நாளைக்கு வருவன் தானே.”
“நான் இப்பிடி மற்றவர்களுக்குப் பாரமாகி இருக்க முடியுதில்லையே. ஏன் இந்தக் கடவுள் என்னச் சோதிக்கிறான். உன்னால எனக்கு ஏதும் உதவி செய்ய ஏலாதே.” என்று பாக்கியம்கேட்டதற்காக அவன் அவர்களோடு கதைத்த போது. “எங்கள் அப்பா அம்மாவை எங்களுக்குப் பார்க்கத் தெரியும் நீ எங்கள் குடும்பத்தில் தலைப்போடாதே போ வெளியே” என எத்தனை நாட்கள் துரத்தியிருப்பார்கள். இவர் எனக்கும் அப்பாதான். தியாகுவின் நெஞ்சு வேதனையால் துடித்தது. பெரியப்பா என கத்த மனம் துடித்தது. தொண்டையில் ஏதோ அடைப்பது போல இருந்தது.
மீண்டும் முன்பக்கமிருந்து அழுகுரல் கேட்கவே தன் சுய நினைவிற்கு மீண்டான் தியாகு. மனதை ஒருவாறு அடக்கிக் கொண்டான். பின் மனந் தெளிந்தான். அவர் கடவுளிடம் நிம்மதியாக இருப்பார். போகட்டும். இந்த வாழ்க்கையை விட இதுவே நல்லது.
அப்பிணம் உயிரோடிருந்த வேளை அவர் மீது தாங்கள் தீராத அன்பு கொண்டிருந்தவர்கள் போலவும், இப்போது அவரின் பிரிவு இவர்களை வாட்டுவது போலவும் நாடகமாடி நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்களே, இவர்கள் எல்லாம் மனிதர்களா? அவர்கள் மீது தியாகுவிற்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
கந்தசாமி என்கின்ற அப்பிணத்தின் கடைசி யாத்திரை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. சிலர் அடிக்கடி தமது கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டனர். காரணம் “வீட்ட போகோனும் எத்தனை வேலை கிடக்கு.” பலருக்கும் பலவிதமான அவசரங்கள். கடைசி மருமகள் சோபா, பாக்கயத்திடம் குனிந்து ஏதோ கூறினாள். அவர் தலை முடிகளை ஒதுக்கிவிட்டார். பின் தன் கையிலிருந்த கைக்குட்டையினால் அந்தக் குழிவிழுந்த கண்களை துடைத்துவிட்டாள். அவரை அப்படியே தன்னுடன் சேர்த்து அணைத்தபடி அப்பிணத்தை உற்றுப்பார்த்தாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. அது பாக்கியத்தின் தலை மீது விழுந்தது. பாக்கித்தின் நடுங்கும் கரங்கள் சோபாவின் கரங்களைப் பற்றின. முதன் முறையாக பாக்கியத்திடமிருந்து விம்மலுடன் கூடிய அழுகை வெளிப்பட்டது. பாக்கியத்தின் அழுகையைக் கேட்டு அநேகரின் கண்கள் கலங்கின.
தியாகு தன்னிருக்கையை விட்டு மெல்ல எழுந்து வந்தான். அவன் கண்கள் கவலையால் சிவந்திருந்தன. தன்
பெரியப்பாவை கடைசித்தடவையாக தொட்டுப்பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவனை உந்தித் தள்ளியது. தன் பெரியம்மா
ஏன் இந்தக் கடைசி நேரத்தில் மட்டும் இப்படி அழுதார்? தன் கணவன் மீது கொண்ட பாசத்தாலா? அல்லது தான்
தனிமையில் இனிப் படப் போகும் கஷ்டங்ளை நினைத்தா? அவர் ஏன் அழுதார்?
சோபா ஏன் அழுதாள்? அது பாசமாக இருக்கும் இதை அவன் மனம் ஏற்றது. ஆனால் மூத்த அண்ணி ஏன் அழுதார். அது
நிச்சயம் ஆனந்தக் கண்ணீராகத்தான் இருக்க வேண்டும்.
தியாகு, தன் பெரியம்மாவின் எலும்புந் தோலுமான கரங்களைப் பற்றியபடி “பெரியப்பா தான் விரும்பிய இடத்திற்கு எங்களை எல்லாம் விட்டுட்டு போய்ட்டார் பார்த்தீங்களா? என்றவாறு நடுங்கியபடி நின்ற பாக்கியத்தை மெதுவாக நாற்காலியில் அமர்த்தினான்.
முற்றும்.