"அருள் சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்"
ஐந்து சகோதரிகளுக்கு ஒரே ஆண் பிள்ளையாக மாயவன் இருந்தான். அவன் பெயரால் மட்டுமா மாயவன் செயலிலும் தான்
மாயவன். மாயவனின் அப்பா ஒரு அரசாங்க உத்தியோகத்தர். அம்மா ஒரு ஆசிரியை. இருவருடைய சம்பளமும்
சாப்பாட்டிற்கே போதுமாயிருந்தது. அப்பாவோ அம்மாவிடம் அடிக்கடி சொல்வார் இவன் தம்பிதான் வளர்ந்து
எங்களுக்குக் கை கொடுக்க வேண்டும். இல்லாட்டி எப்படித்தான் இந்தக் குமருகளைக் கரை சேர்க்கப் போறேனோ
என்று புலம்புவார். இவற்றை அடிக்கடி கேட்டதாலோ என்னவோ மாயவனின் உள்ளத்திலும் அவை வேரூன்றி விட்டன.
மாயவனின் தங்கைமார் ஒவ்வொருவராக வயதுக்கு வரும்போதும் அம்மாவும் அப்பாவும் மிகுந்த வருத்தங் கொண்டனர்.
மாயவன் பல கஸ்டங்களின் மத்தியிலும் கனடா வந்து சேர்ந்துவிட்டான். பின் இரவு பகல் பாராது மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்து அவர்களுக்கு பணம் அனுப்பிக் கொண்டிருந்தான். அம்மா, அப்பா, தங்கைமாரின் கடிதங்கள் அந்த சந்தோஷமான வரிகள் அவனுக்கு மேலும் உற்சாகமூட்டிக் கொண்டிருந்தன. அப்பாவின் பொறுப்புக்களைச் சுட்டிக் காட்டும் பல வரிகள் அவனை ஓய்வு கொள்ள விடுவதில்லை.
காலம் அசுர வேகத்தில் உருண்டோடியது. ஒருவாறு தன் நான்கு தங்கைகளுக்கும் திருமணம் முடிந்துவிட்டதை நினைந்து சந்தோஷப்பட்டாலும் தன்கடைசித் தங்கையின் விடயத்தில் மிகுந்த கவலை கொண்டிருந்தான். அவளுக்கும் வயது 25 ஆகியிருந்தது. செவ்வாய்க்குற்றம் என்பதால் வரன் பார்ப்பது மிகுந்த சிரமமாயிருந்தது.
அவன் தங்கியிருந்த வீட்டு அருணிற்கும் செவ்வாய்க் குற்றம் என்பதை அறிந்ததினால் அவர்களிடம் கேட்டால் என்ன
என்ற முடிவிற்கு வந்தவனாக கேட்டும் விட்டான். அருணின் அக்காவை யார் திருமணம் செய்யச் சம்மதிக்கிறார்களோ
அவர்கள் வீட்டில் சம்மந்தம் செய்யச் சம்மதம் என்றார்கள். மாயவனிற்கோ தன் தங்கையின் வாழ்வே பெரிதாகத்
தோன்றியதால் அதற்குச் சம்மதித்தான். மாயவன் தன் பொறுப்புக்கள் அனைத்தும் நீங்கிவிட்டது என நினைத்து ஒரு
வேலையையும் விட்டுவிட்டான். இப்போ தன் கால் ஊனமுற்ற மனைவிக்கு ஊன்றுகோலாக இருக்கின்றான்.
சோபாவிலே அமர்ந்திருந்த அப்பா அம்மாவிடம்
அருள் சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்
என்று கூறுவது தனது மனைவியை குளிக்கவார்த்து தலை துடைத்துவிட்டுக் கொண்டிருந்த மாயவனின் காதுகளில் விழுகின்றது.
முற்றும்.