"நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது"
அஞ்சல் பெட்டியைத் திறந்தவளின் கண்களிலே அந்த நீல நிறக் கடிதம் தென்பட்டது. அவசர அவசரமாக எடுத்துப்
பிரித்துப் படித்தாள் சசி. அக்கடிதத்தை வாசித்தவள் மிகுந்த கவலையுடன் காணப்பட்டாள். அவள் தங்கை
தாங்களும் தங்களுடன் சேர்ந்தவர்களும் படும் கஷ்டங்கள் பற்றியும் எழுதியிருந்தாள்.
மேலும் அக்கா நீ ஒருத்தியாவது வெளிநாடு போனதால் நாங்கள் ஒரு நேரக் கஞ்சியாவது குடித்து வயிறாறுகின்றோம். நீயும் அத்தானும் காட்டுகின்ற கருணை எங்களை வாழ வைக்கிறது. உன்னைப் போல் எல்லோருமே இருந்துவிட்டால் இங்கு இத்தனை உயிர்கள் பலியாகியிருக்குமா? அக்கா உன் பள்ளித் தோழி சுஜாவின் இரண்டு குழந்தைகள் பட்டினியால் இறந்துவிட்டன. இன்னும் இரு குழந்தைகள் தான் மிஞ்சியுள்ளன. அவர்கள் சிறிது வளர்ந்தவர்கள். அவவின் சகோதரிகள் இருவர் உன் வீட்டிற்கருகில் இருப்பதாக முன்பு எழுதியிருந்தீர்கள் தானே. அவர்களுக்கு நீங்களாவது புத்தி சொல்லக் கூடாதா? சுஜாவும் கணவன் இல்லாமல் படும் கஷ்டங்கள் சொல்லிவிட முடியாது. அக்கா அந்தக் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும். தயவுசெய்து நீ அவர்களிடம் எடுத்துக் கூறு. என்று கண்டிப்புடன் எழுதியிருந்தாள்.
கடிதத்தை மடித்து மேசையிலே போட்டவள் அப்படியே சோபவிலே அமர்ந்தாள். போன சனிக்கிழமை ஜானகி எவ்வளவு கோலகலமாக தன் மகளின் பிறந்த நாளைக் கொண்டாடினாள். அவவுடன் கதைத்துப் பார்த்தால் என்ன என்ற முடிவுக்கு வந்தவள் போனை எடுத்து நம்பர்களைச் சுழற்றினாள். மறு முனையிலே சுஜாவின் அக்கா ஜானகி தான் கதைத்தாள். சசி தனது தங்கையின் கடிதம் பற்றிக் கூறினாள். சிறிது படபடப்புடன் கதைகளைக் கேட்ட ஜானகி தனக்கு தன் தங்கை பற்றி எதுவுமே தெரியாதென்றுங் கூறினாள். நீண்ட நேரமாக அழுதாள். தான் பிழை விட்டு விட்டதை உணர்ந்தாள்.
டெலிபோனைத் துண்டித்த சசி அன்று முழுவதும் மிகுந்த கவலையுடனேயே காணப்பட்டாள். பின் தனது கணவன் வந்ததும் அக்கடிதத்தை நீட்டினாள். கடிதத்தை வாசித்த றஞ்சனும் மிகவும் கவலைப்பட்டான். வறுமை எவ்வளவு கொடியது தீயில் கூடத் தூங்கிவிடலாம் பசியை எப்படித்தாங்குவார்கள் அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் என இருவரும் கதைத்துக் கொண்டிருந்தனர். அப்போ அவர்கள் கதைகளைச் செவிமடுத்த ரஞ்சனின் அப்பா பொன்னம்பலம் வாத்தியாரும் இதைத்தானே வள்ளுவரும் சொல்லியிருக்கிறார்.
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது
என்றார்.
முற்றும்.