Design & Development
Graphic Designing | Web Development
‘எழில்நிலா’ இணையத்தளத்திலிருந்து சேமிக்கப்பட்ட சில ஆக்கங்கள்
Some articles archived from ‘ezilnila.ca’

ரசித்த சில கவிதைகள்

இங்கு இடப்பட்டிருக்கும் கவிதைகள் யாவும் ஏதோ ஒரு வகையில் என்னைக் கவர்ந்திருக்கின்றன. இவை உங்களையும் கவரலாம்..! படித்துப் பாருங்களேன்..!

வரிசையில் நிற்கிறார்கள்; வாழ்வைத் தொலைக்கிறார்கள்!

'விடையிராதா
நீண்ட கேள்விகளால்
நிறைகிறது –
எதற்கெதற்காகவோ காத்திருக்கிற மனசு..
'நீண்ட பாலை நிலங்களில்
காய்ந்த புற்களை போல்
தொலைத்திட்ட ஆசைகள்
மரணத்தை மட்டும் மிச்சம் வைத்துக் கொண்டு
எல்லாவற்றிற்குமாகவும்; காத்திருக்கவே செய்கிறது..

'வருடத்தில் பூக்கும்
வளைகுடாவின் பசுமையை போலன்றியும்
வருடங்களிரண்டில் பார்த்து வந்த குடும்பத்து முகங்கள்
தூரத்தின் இடைவெளியில் –
சிக்கிக் கொண்ட பாரங்களாகவே கனக்கின்றன..

'எரிக்கும் வெயில்; வலிக்கும் குளிர்
கண் அடைக்கும் மனற் காற்று
எல்லாம் கடந்தும் –
உறவுகளின் நினைவுகளில் வலிக்கும்; வலி
தீர வதையன்றி வேறில்லை..

'சான்றிதழ் தூக்கிக் கொண்டு ஏறி இறங்கிய படிகள்,
வெளிநாட்டில் வேலை கிடைத்துவிட்டதென வெடித்துச் சிரித்த சிரிப்பு,
விமானத்திலிருந்து இறங்கிய பின் வாங்கிய முதல் சம்பளம்,
இவை எல்லாவற்றையும் ஈடுகட்ட
கண்ணீர்தான்
கண்ணீர்தான் மிச்சமாகுமென
அன்று தெரியவில்லை –

முடிகொட்டி
வாழ்க்கை மொட்டையாகி
கிழவனென்று பட்டம் சுமந்து ஊர்செல்கையில்
மிக நன்றாகவே தெரிகிறது;

'தெரிந்து மட்டுமென்ன செய்ய
அதோ எனை சுமந்து வந்த விமானம் திரும்பி செல்கையில்
இங்கிருந்து நிறைய பேரை –
ஏற்றிக் கொண்டு தான் செல்கிறது; அதே வதை நோக்கி!!

-வித்யாசாகர்-